நாளை இரவு 8.30க்கு விளக்குகளை அணையுங்கள்!: புவி வெப்பமாவதை தடுக்கலாம்.

நாளை இரவு 8.30 - 9.30 வரை ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்கும்படி சர்வதேச வனவிலங்கு நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது. வெப்பமடைந்து வரும் பூமியை காப்பாற்ற இது பெரிய உதவி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே போன்ற விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 35 நாடுகளைச் சேர்ந்த ஐந்து கோடி பேர் விளக்குகளை அணைத்தனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் இதுபோன்ற முயற்சிகளை பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்த அமைப்பு எடுத்து வருகிறது. சர்வதேச வனவிலங்கு நிதியம், இந்த ஒரு மணி நேரத்தை பூமி நேரம் (எர்த் ஹவர்) என்று பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டு 1,000 நகரங்களைச் சேர்ந்த 100 கோடி பேர் விளக்குகளை அணைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முயற்சிக்கு ஆதரவாக உலகின் முன்னணி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், அறிஞர்கள் மற்றும் நட்சத்திரங்கள் முன் வந்துள்ளனர். இந்தியாவில் இந்தி நடிகர் அமீர் கான் இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், பருவநிலை மாற்றம் தான் தற்போது நம் முன் உள்ள மிகப்பெரிய வருந்தத்தக்க சவால். இது சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, பருவநிலை சீரடைய நடத்தும் போராட்டத்தில் பங்கு கொள்ளுங்கள். பூமி நேரத்தில் விளக்குகளை அணைத்து ஆதரவு தாருங்கள், என்கிறார். இதுபோன்ற சிறிய முயற்சியால் நடக்கப் போவது என்ன? கடந்த 2007ல் சிட்னியில் பரிசோதனை முயற்சிக்காக விளக்குகளை அணைத்தனர். அப்போது 10.2 சதவீத எரிபொருள் சேமிக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவைவிட இது, இருமடங்கு சேமிப்பை தந்தது. அத்துடன் வளிமண்டலம் வெப்பமடைய காரணமாக உள்ள கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 28.46 டன் குறைந்தது. இது 48 ஆயிரத்து 613 கார்களை ஒரு மணி நேர அளவுக்கு நிறுத்தி வைத்திருந்ததற்கு சமமாக அமைந்தது. எரிபொருள் செலவில் விளக்குகளுக்கு மட்டும் 5 முதல் 15 சதவீதம் செலவழிக்கிறோம். அலுவலகங்களில் இது 37 சதவீதம் வரை செலவாகிறது. வீணாகும் எரிபொருளை சேமிப்பதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்த முடியும். அத்துடன் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற முடியும். நாடு முழுவதிலும் மின்தடை அமலில் இருந்தபோதிலும் கூட, இந்த நேரத்தில் விளக்குகளை அணைத்து மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் தீபங்களுடன் நம் கடமையை நிறைவேற்றலாம். எரிபொருளை மிச்சப்படுத்த கீழ்க்கண்ட விஷயங்களையும் கடைபிடிக்கலாம்.
 * கம்ப்யூட்டர், மின்விசிறி மற்றும் விளக்குகளை உபயோகத்தில் இல்லாத போது அணைக்கலாம்.
 * காகிதங்களை இரு புறங்களும் பயன்படுத்தலாம். தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே பிரின்ட் எடுக்கலாம்.
 * ஷேவ் செய்யும் போதும், பல்துலக்கும் போதும் குழாயை நிறுத்திவிடலாம்.
* ஏர்-கண்டிஷனர் வெப்பநிலையை 23-24 டிகிரியிலேயே வைத்திருக்கலாம்.
 * உங்கள் வாகனங்களை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யலாம்.
 * ரீசார்ஜ் செய்யும் பாட்டரிகளை உபயோகப்படுத்தலாம்.
 * குண்டு பல்புகளுக்குப் பதிலாக சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்தலாம்.
 * நீங்கள் பயன்படுத்திய பொருளை குப்பைக்கு அனுப்புவதற்கு முன், அது மற்றவர்களுக்கு பயன்படும் என்றால் அதை கொடுக்கலாம். இது போன்ற சிறு, சிறு முயற்சிகள் பெரிய அளவில் பயன் தரும். நன்றி; தி்ன்மலர்