Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

மொட்டுகள் - சிறுகதை - அமல்




‘என்ன இன்னும் பாதி தூரம் மேலே ஏறனும்… இப்பவே இப்படி உட்கார்ந்துட்ட…’

‘முடியல மச்சான்…, கால வலிக்குது, மூச்சு வாங்குது. கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு நடக்கலாம்’. குளிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பித்து இருந்தது. அர்க்கன்சா மாநிலத்தில் உள்ள பினாக்கில் மலையில் ஏறும் போது வானதி மிகுந்த களைப்போடு ஒரு பாறையில் அமர்ந்தவாறே சொன்னாள்.

‘முதல் நாள்ல…, இன்று இது போதும், நாளைக்கு வருவோமா?’

‘வேண்டாம், இன்றைக்கே மலை உச்சிக்கு ஏற பார்ப்போம்’.

‘சரி…’ என்றவாறே சின்னானும் ஒரு பாறையில் அமர்ந்தான்.

‘மருத்துவர் 26 பவுண்டுகள் எடைய குறைக்க சொல்லியிருக்கார். மாதத்துக்கு 5 பவுண்டாவது குறைக்கனும்…’, மூச்சு வாங்கியவாறு சொன்னாள்.

‘தைராய்டு பிரச்சனை, வைட்டமின் டி குறைவாக இருக்கு என்று  எல்லாவற்றுக்கும் மாத்திரை சாப்பிட சொல்றாரு.. எதற்கோ பார்க்க போனா என்னென்னமோ சொல்லுராரு. இந்தியாவிலிருந்து வந்த மருத்துவராச்சே நம்ம பழக்க வழக்கமெல்லாம் தெரியும்னுதான் போனோம்’

‘ஊருக்கு போனப்ப கூட எல்லோரும் கேட்டாங்க.’

‘யாரு?.

‘அக்கா, பெரியம்மா எல்லாம் தான்’.

‘அம்மா கூட நேற்று பேசும் போது கேட்டாங்க’.

‘என்ன சொன்னீங்க?’.

‘மருத்துவரிடம் பார்தோம், உடம்புக்கு ஒன்னுமில்ல, எடையதான் குறைக்க சொன்னார்னேன். ஆஞானும்  கொஞ்சம் வருத்தமாதான் இருக்காங்கலாம்.’

‘சொந்தத்தில கல்யாணம் பண்ணினதாலதான் இப்படி இருக்குனு வேற  ஊரில சொல்லுறாங்க.’

‘திரும்ப எப்போது ஊருக்கு போவதுனு தெரியல.’, என்றான் சின்னான்.

‘இங்கயாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம். ஊருக்கு போன எல்லாருக்கும் பதில் சொல்லனும். தங்கச்சி வேற எனக்கு பிறந்த பிறகு பெத்துகிறேனு சொல்ரா.’

‘அது மாதிரியெல்லாம் இருக்க சொல்லாத.... சரி வா மேலே ஏறுவோம். இருட்டுறதுக்குள்ள இறங்கனும்ல’.

‘இந்த நாட்டுக்கு வந்ததிலிருந்து உடம்புக்கு எதாவது வந்து கிட்டே இருக்கு. வந்து மூன்று வருடத்திலேயே இங்கே மரங்களில் பூக்கிற பூவிலிருந்து வரும் மகரந்தம் ஒவ்வாமையா இருக்கு. அதுக்குவேற மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கு. உடம்பில் இருக்கிற எதிர்ப்பு சக்தியெல்லாம் கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சிகிட்டே இருக்கிறதுல?’

‘ஆமாங்க, இங்க வந்து மூன்று வருடத்தில் எப்படி 40 பவுண்டுகள் எடை ஏறுச்சினு  தெரியல’.

‘ஊரில் அடிக்கிற வெயிலில், வருகிற வேர்வையிலேயே எல்லாம் சரியாகிவிடும் இங்க எவ்வளவு வெயில் அடித்தாலும் வேர்க்க மாட்டேன்கிறது. ஊரில் வயலில் வேலை செய்யும் போது வேர்வை தானாக வரும். அப்போது நினைக்கவில்லை நான் குளிரூட்டப்பட்ட அறையில் வேலை செய்வேன் என்று. இப்போது வீடு, வேலை செய்யும் இடத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு வயலில் வந்த வேர்வையை நினைத்து ஏங்க வேண்டி இருக்கிறது. இதுதான் இக்கரைக்கு அக்கரை பச்சையா…’

மரங்கள் அடர்ந்த பகுதி முடிந்து பாறைகள் நிறைய இருந்தது. சில இடங்களில் பாதை சரியாக இல்லாமல் பெரிய பாறைகள் மீது ஏறி செல்ல வேண்டி இருந்தது.  சில மரங்களில் நிறைய குருவி கூடுகள் இருந்தது. கீழே தெரிந்த எல்லா கூடுகளிலும் முட்டைகளும், சிலவற்றில் குருவிகளும் இருந்தன. ஒரு கூட்டில் அன்று தான் பொரித்த இரண்டு சிறிய குருவி குஞ்சுகள். அவர்கள் அருகே சென்றதும் வாயை பிளந்து கொண்டு இறக்கைகளை அடித்து கொண்டு குதித்தது. அவைகளை மெதுவாக வானதி தன் கையில் எடுத்துக் கொண்டு, 
‘எவ்வளவு அழகாக இருக்கு. நாம வீட்டுக்கு எடுத்து போகலாமா? கையில் எதுவும் சாப்பாடு இல்லை. தண்ணீர் கொடுக்கலாமா?’ தனக்கே ஒரு குழந்தை பிறந்தது போன்று ஆர்வம் கொண்டாள்.

‘வீட்டுக்கு எடுத்து போய் நாம் இதை காப்பாற்ற முடியாது. ஒன்றும் சாப்பிட கொடுக்காதே. அதெல்லாம் அம்மா குருவி பார்த்துக்கொள்ளும்.’

‘இதெல்லாம் என்ன குருவிகள் மச்சான்…?’

‘தெரியலை. ஆன நம்ம ஊர்ல இருக்கும் இரட்டை வால் குருவி மாதிரி இருக்கு. இதெல்லாம் இன்னும் கொஞ்சம் நாளில் பொரித்து குருவியா மாறிவிடும். கோடையில பார்த்து இருக்கியா? பெரிய பெரிய கூட்டமா இலட்ச கணக்கான குருவிகள் வானத்தில சுற்றி வருமே. ஏதோ ஒரு பாட்டுக்கு நடனமாடுவது போல, அவைகள்தான் இந்த குருவிகள்.’

‘ஆமாம்… இப்போ ஞாபகம் வருகிறது. வசந்த காலம் வந்த உடனேயே மரங்கள் எல்லாம் பூக்க ஆரம்பித்து விடுகிறது. பறவைகள் எல்லாம் முட்டையிட்டு பொரித்து நிறைய பறக்க ஆரம்பித்து விடுகிறதுல.’

சூரியன் மேற்கே இறங்கி கொண்டிருந்தது. இலேசான சிறிது குளிர்ந்த காற்று வீச தொடங்கியிருந்தது.

‘கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு போகலாம் மச்சான்…’

‘ஊரில நெல்லு வயல்ல, நாற்றை நட்டு ஒரு வாரத்திற்கு பயிரெல்லாம்  வேர்பிடிக்கிற வரைக்கும் பச்சை பிடிக்காம பழுப்பு நிறமா இருக்கும். ஒரு வாரத்திற்கு பிறகு தான் வேர்பிடித்து பச்சையாக வளரும். அது மாதிரி தான் நாமும் இப்ப இந்த நாட்டுக்கு வந்து இருக்கிறோம்.’

‘அப்ப இன்னும் கொஞ்ச நாளில் நம்ம பிரச்சனை எல்லாம் முடிஞ்சிருமா?’

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். நல்லதே நினைப்போம். ஊரில் நம்மால நான்கு பேரு நல்லா இருக்காங்கல. நாம யாருக்கும் கெட்டது செய்யல. அதனால நமக்கு நல்லதுதான் நடக்கும். ஆமா… தமிழ் சங்க விழாவில் என்ன செய்ய போகிறாய்...?’

‘இந்த ஆண்டுதான் கோலபோட்டியெல்லாம் இருக்குள்ள. கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த காட்டுக்குள்ள கலர் கோலமாவு எங்க வாங்குறது. நியூசெர்சினா கடை இருக்கு வாங்கலாம்.’

‘ஏதாவது வெள்ளை மாவுலேயே போடலாம்ல.’

‘அப்படித்தான் செய்ய வேண்டும். சின்ன புள்ளைங்க எல்லாம் நடனமாடும்ல. நமக்கும் ஒன்னு இருந்திருந்தா அதுவும் சேர்ந்து இப்ப ஆடும்ல மச்சான்…’

‘நமக்கு இனிமே பிறந்தாலும் நமக்கு பிறகு திருமணம் செய்தவர்களுக்கு பிறந்த குழந்தைகளை விட சிறியதாக தான் இருப்பார்கள்.  அந்த வித்தியாசம் கடைசி வரைக்கும் இருக்கும்ல?’

இருவரும் மௌனமாக நடந்தார்கள்

‘தமிழ்ச்சங்கத்துல சசி இருக்காங்கல அவங்களும் ஆறு மாதமா மருத்துவம் பார்க்கிறார்களாம். முதல் மூன்று மாதமா செயற்கை கருவூட்டல்(IUI) பிறகு நல்ல முட்டை உருவாக வயிற்றில் ஊசி மூன்று மாதங்களாக போட்டாங்களாம். ஒன்றும் பயனில்வையாம். இப்ப வெளி செயற்கை கருவூட்டல்(IVF) முறைதான் செய்ய வேண்டுமாம். அதுவும் எப்படி பயனளிக்கும் என்று தெரியவில்லையாம். மருத்துவ காப்பீடும் அதற்கு இல்லையாம். அவங்களும் வருத்தத்தில் இருக்காங்க.’

‘நமக்கு அந்த அளவுக்கு போகாது என்று நினைக்கிறேன்.’

‘எல்லாருக்கும் எளிதாக நடப்பதெல்லாம் நமக்கு ஏன் இப்படி இருக்கு?’

‘எல்லாருக்கும் என்று சொல்ல முடியாது. என் அலுவலகத்தில் நம்ம கூட திருமணமான ஏழு பேரில் இன்னும் இரண்டு பேருக்கு பிரச்சினை இருக்குதே.’

‘ஒருவேளை கடவுள் நம்மை சோதிக்கிறார் போல. நம்மலோட மனதை திடப்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். என்னோட தோழி பெங்களூருவில் இருக்கும் குழந்தை இயேசு கோவிலுக்கு வேண்டிக்கொள்கிறேன் இந்தியா வந்தால் ஒரு முறை அந்த கோயிலுக்கு போங்கள் என்று சொன்னாள்.’

‘ஆமாம்... ஒரு முறை போய் விட்டு வருவோம்.’

மீண்டும் மௌனமாக நடந்தார்கள்.

‘மச்சான்... கொஞ்ச நாள் பார்த்துவிட்டு ஊர்ல ஒரு குழந்தைய தத்து எடுத்து இங்க கூட்டிட்டு வரலாமா?’

‘நானும் அதைத்தான் நினைத்தேன். விசாரித்து பார்க்கலாம். நமக்கே அடுத்த ஆண்டு விசா கிடைக்குமா என்னாகும் என்று தெரியல.’

‘வந்து ஆறு ஆண்டுகள் முடிந்தவுடன் இந்தியாவுக்கே போய்விடலாம் என்று நினைத்து இருக்கிறோம். அதற்குள் குழந்தை பிறந்தால் நல்லது. இல்லை என்றால் ஊரில் போய் எப்படி இருப்போம் என்று தெரியவில்லை.’

‘அங்கு போய் மருத்துவம் பார்க்க வேண்டியதுதான்.’

‘பார்க்கலாம். ஆனால் பார்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது எப்படி.  அதற்கும் வழி காணவேண்டும். ஆனால் நான் உறுதியாகத்தான் இருக்கிறேன். இந்த விசயத்தில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் என்னோட வேலையை செய்வதென்று.’

‘ஆமாம்... அதுதான் நல்லது.’

மலை உச்சியை நெருங்கி கொண்டிருந்தார்கள். கிழக்கு பகுதியில் அர்க்கன்சா ஆற்றில் சரக்கு கப்பல் ஒன்று தூரத்தில் சென்று கொண்டிருந்தது. சிலர் படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தது சிறியதாக தெரிந்தது. எதிர் புறம் காடுகள் அழிக்கப்பட்டு பெரிய  பெரிய மின்கம்பங்கள் வரிசையாக அமைந்து நேரான நீண்ட பாதை போன்று காணப்பட்டது.

‘மச்சான்... என் மீது ஏதாவது வருத்தமா?’

‘ஏன் கேக்குற?’

‘இல்ல... ஆசை ஆசையா கல்யாணம் முடித்து என்னை இங்கு கூட்டி வந்திங்க. இப்ப மூன்று ஆண்டுகள் ஆகபோவுது…’

‘நான் அப்படி வருத்தப்படுவேனு நினைக்கிறியா? வருத்தபட்டு எந்த நல்லதும் நடக்க போவதில்லை. இது மாதிரி நீ நினைப்பதை முதலில் விடு. இந்த ஆற்று கரையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார். ஏதாவது ஒரு மரம் இலையோடு இருக்குதா? இங்க இருக்குற மரமெல்லாம் ஆறு மாதமா குளிரில் பட்டுபோன மரம் மாதிரி இருக்கு. இன்னும் ஒரு மாதத்தில் தளைத்து அடர்ந்த காடு மாதிரி ஆகிவிடும். இந்த மண்ணு அது மாதிரி. இந்த குளிரில் வாழும் எல்லா உயிரும் அப்படி தான். அது போராடிதான் வாழனும். இதுவே நாம பிறந்து வளர்ந்த காவிரி கரையில் எவ்வளவு வளம். அது எப்போதும் உயிரோட்டமான மண். அங்கே வளர்ந்த நாம் இங்கே வாழவேண்டுமானால் போராடதான் வேண்டும். அந்த போராட்டத்தில் நமது பிரச்சினை எல்லாம் ஒரு பகுதிதான். நமது பிரச்சினை என்ன என்று தெரிகிறது. நல்ல தீர்வைதான் தேடவேண்டும்.’

‘நல்ல தீர்வு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.’

‘போன வாரம் நம்மாழ்வார் ஐயாவோட ஒரு காணொளி பார்த்தேன். காய்ச்சலும் பாய்ச்சலும் நெல்லு வயலுக்கு நல்லது. அப்போது தான் நிறைய தூர் செடிகள் முளைத்து நிறைய நெல்மணிகள் காய்க்கும் என்றார். நான் என்ன நினைக்கிறேன் என்றால் நம்ம ஊரில் உண்ணா நோன்பு இருப்பாங்கல அது மாதிரி நாம வாரம் ஒரு நாள் இருக்கலாமா? நாம் தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருக்கிறோம். நோன்பு இருந்தால் உடலுக்கும் ஓய்வு கிடைக்கும் எடையும் குறையும் என்று நினைக்கிறேன். நெல் நடவு வயலைவிட நாற்றங்கால் வயலை நல்லா உழுது மட்ட படுத்துவார்கள். மண்ணு கூட இட்லி மாவு மாதிரி ஆகிவிடும். அப்போது தான் நெல் மணிகள் நன்றாக முளைத்து வேர்விட்டு வளரும். அது மாதிரி நம்ம உடலையும் சரி செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.

‘நமக்கு சரியாக வருமா? மருத்துவரிடம் கேட்கலாமா?’

‘முதலில் ஒரு வேளை நோன்பு இருப்போம். பிறகு அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு மூன்று வேளை என்று அதிகரித்து பார்ப்போம். காந்தி தாத்தா அதிகபட்சமாக 21 நாட்கள் சிறிது தண்ணீர் மட்டுமே அருந்தி விட்டு உண்ணா விரதம் இருந்திருக்கிறார். நாம் ஒரு நாள் தானே இருக்க போகிறோம். மருத்துவரிடம் கேட்க தேவை இல்லை என்று நினைக்கிறேன்.’

‘ஆமாம் மச்சான்..... அம்மா கூட செவ்வாய் கிழமைகளில் இருப்பாங்க. நம்ம ஊரு பழக்க வழக்கத்திலேயே ஆயிர கணக்கான மருத்துவ குறிப்புகள் இருக்கு. நாம் தான் அதை எல்லாம் தெரிந்து இப்போது உள்ள மருத்துவ உதவியை கொண்டு நம்ம உடலுக்கு தேவையான தீர்வுகளை தேடவேண்டும். இப்போது சில நாட்களாக நடக்க ஆரம்பித்த உடன் சிறிது எடை குறைந்து இருக்கு. சுறுசுறுப்பாக இருக்கு. சுறுசுறுப்பாக இருந்தாலே உடம்பில் எல்லாம் சரியாக வேலை செய்யும்ல.’

சூரியன் இன்னும் சிறிது நேரத்தில் மேற்கில் மறைய இருந்தது. வானம் மேகம் இல்லாமல் தெளிவாக தெரிந்தது. வானூர்திகள் வெள்ளை நிற நீண்ட புகை வாலுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக போய் கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய வரை இலைகள் இல்லாமல் மொட்டையாக பூ மொட்டுகளுடன் மரங்கள். மொட்டுகள் மஞ்சள் வெயிலில் பொன்னிறமாக மின்னியது. 

‘மச்சான்... இங்க பாருங்க மரமெல்லாம் தங்கமா காய்த்திருக்கு.’

‘ஆமாம்... அப்படியே பறித்து மூட்டையா கட்டி, அந்தா போகிற கப்பலில் ஏத்திருவோமா. இன்னும் பத்து நாளில் இதெல்லாம் பூத்து ஊரே மஞ்சள் பொடியா மாறிவிடும். நான் ஒவ்வாமையினால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது.’

‘உங்க கவலை உங்களுக்கு. இப்போது மாத்திரை சாப்பிடுவதால் ஒன்றும் செய்யாது.’

‘ஒன்றும் செய்யாதா. போன வருடம் பார்த்தல... கண்ணுக்கே தெரியாமல் காற்றில் கலந்து இருக்கும் இந்த மகரந்தம் எப்படியாவது உடம்புக்குள்ள போய் விடுது. கண்ணு மூக்குல ஆரம்பித்து தொண்டை, மூச்சு குழல், நுரையீரல் இரு பக்கமும், விலா எலும்பு, முதுகு வரைக்கும் அரிக்கும். கண் இரண்டும் சிவந்து விடும். இரவெல்லாம் மூக்கு அடைத்து கொண்டு வாய் வழியாகத்தான் மூச்சு விட வேண்டும். பகலிலும் தூக்கம் வந்து சோம்பலாக ஒரு மாதத்திற்கு இருக்கும். கண்ணுக்கு கண்ணாடி, சொட்டு மருந்து. மூக்கு வாய்க்கு முகமூடி, மாத்திரை என எவ்வளவு முயற்சி. மழை பெய்து காற்று சுத்தமானால்தான் மூச்சு விட நன்றாக இருக்கும்.’

‘பார்ப்போம்… இந்த ஆண்டு அந்த அளவுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். இங்க பாருங்க. இதுவே எவ்வளவு அழகா இருக்கு. இரண்டு மாதத்துக்கு முன் இங்கே வந்திருந்தால் பனி படர்ந்து இந்த இடம் முழுவதும் வெள்ளையாக இருந்திருக்கும்ல.’

‘ஆனால்... பனியில் எப்படி இவ்வளவு தூரம் மேலே ஏறி வருவது. பாதை கூட ஒழுங்காக இல்லை. இரண்டு மாதத்தில் எவ்வளவு பெரிய மாற்றம்ல. இதற்க்கெல்லாம் சூரிய ஒளிதானே காரணம். வெயிலின் அளவு மாறி வரும் போது எவ்வளவு மாற்றம்ல. ஒன்னு கவனிச்சியா? கொஞ்சம் வெயில் அதிகமானவுடன் குளிர்ல பட்டுபோன மாதிரி இருந்த மரமெல்லாம் எவ்வளவு மொட்டு விடுது. சூரிய ஒளி எவ்வளவு பெரிய சக்தில. அப்படினா மருத்துவர் சொன்னார்ல, நமக்கு விட்டமின் டி குறைவாக இருக்கு என்று.  நம்ம பிரச்சனைக்கு அது கூட காரணமாக இருக்கலாம்ல?’

வானதியின் கண்கள் பெரிதாக மலர்ந்தது. ‘ஆமாம் மச்சான்... இந்த ஊருக்கு வந்து நாம் இழந்த முக்கியமானதுன்னா அது வெயில் தான். வெயிலை நம்பிதானே இந்த உலகமே இருக்கு.  அப்படினா அதுக்கு வழி கண்டுபிடிச்சுட்டா நமக்கு பிரச்சினை இல்லை. எனக்குள்ள ஒரு மொட்டு உருவாகும்ல?’

மேற்கில் பெரிய சிவப்பு தீ பந்து போல சூரியன் தூரத்தில் மரங்களுக்குள்ளாக மறைந்துகொண்டிருந்தது. அவர்களின் மனதில் உற்சாகத்தில் தீ எழுந்து வந்தது கண்கள் வழியாக தெரிந்தது.

‘சரி வாங்க.. . இருட்ட போகுது... கீழே இறங்கலாம்.’

‘பார்த்து வா. கீழே இறங்குறது எளிது. ஆனால் பார்த்து காலை வை.’

‘நான் ஆறாவது படிக்கும் போதெல்லாம் ஊர்ல எங்க வீட்டு கொல்லையில நிறைய மல்லிகை பூச்செடிகள் இருக்கும். காலையிலேயே பூவையெல்லாம் பறித்து பூக்கார தெருவிலிருக்கிற பூச்சந்தையில போய் விற்க வேண்டும். அங்கே அதற்கு நிறைய தரகர்கள் இருப்பார்கள். நேரம் செல்லச் செல்ல வெளியூர் பூவெல்லாம் வந்து விட்டால் பூ விலை குறைந்து விடும். காலையில் ஒரு சேர் நான்கு ரூபாய்க்கு விற்ற பூவெல்லாம் நண்பகலில் ஒரு ரூபாய்க்கு விற்கும். அதனால் அதற்கு முன் விரைவாக பூ பறித்து செல்ல வேண்டும். எங்க கொல்லையில் பூ இல்லாவிட்டால் பக்கத்து கொல்லையிலெல்லாம் போய் பறித்து கொடுப்பேன். காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை பறித்து கொடுத்தால் ஒரு ரூபாய் கொடுப்பார்கள்.’

‘ஒரு ரூபாயா?’ 

‘ஆமாம், ஒரு மணி நேரம் பறித்தால் ஐம்பது காசு. பள்ளி விடுமுறை நாட்களில் காலை பத்து மணி வரை கூட பறிப்போம். செடிகளுக்கு இடையில் குனிந்து நின்று காலை வெயிலில் பறித்தால் உடலெல்லாம் வேர்த்து கொட்டும். சில நேரம் மயக்கம் கூட வரும்.’ 

‘குடை வைத்து கொள்ளமாட்டீங்களா?’

‘இரண்டு கைகளாலும் பூ பறிக்கும் போது குடை எப்படி வைத்து கொள்வது? நான் பறித்த இலட்சக்கணக்கான மல்லிகை, முல்லை பூ மொட்டுகளின் சாபமோ என்று கூட இப்ப நினைக்க தோன்றுகிறது.’

‘அதெல்லாம் இருக்காது. அப்படி பார்த்தால் எவ்வளவு கோழிகளை கொன்று தின்கிறோம்.’

‘அதுவும் கூட இருக்கலாம்தானே?’

‘இருக்கலாம்... முதலில் மருத்துவர் சொன்னதுபோல உடலை சரிசெய்வோம். அடுத்து பரிகாரம் தேடுவோம்.’

‘இப்படி நடப்பதே பரிகாரம் தான். ஊரில் மலையேறி போய் சாமி கும்பிடுவோம். இங்க உடலின் எடையை குறைக்கிறோம்.’

எதிரில் பாதையின் குறுக்காக ஒரு மான் கூட்டம் தன் குட்டிகளுடன் நின்று அவர்களை பார்த்து விட்டு பின் மெதுவாக ஓடியது. 

‘பச்சையே இல்லாத இந்த காட்டில் இந்த மான்கள் எதை தின்னும்.’

‘காய்ந்த சருகுகளும், சவுக்கு மர இலைகளும்தான்…’

‘இப்படி பசியில் அலைகிற மான்கள்தான் சாலையில் வண்டியில் அடிபட்டு இறக்குதுங்க. நேற்று கூட ஒரு குட்டி மான் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்ததுல?’

‘மனிதனோட பசிக்கு இந்த பூமியே போதாது. அவனோட மகிழ்ச்சிக்கு ஆசைக்கு அவன் பார்வை பட்ட இடமெல்லாம் இந்த மாதிரி அப்பாவி உயிர்களுக்குத்தான் ஆபத்து. இவன் வானில் மலைகளில் தரையில் கடலில் செய்யும் பாவமெல்லாம் அவனுக்கே திரும்பி வருவது தெரிந்தும் அதையே திரும்ப செய்கிறான். காற்றும் மண்ணும் தண்ணீரும் உயிர்கள் வாழ தகுதியில்லாமல் மாறிக்கொண்டிருக்கிறது. சத்து குறைந்த நச்சு மிகுந்த உணவுகளால் வரும் புதுப்புது நோய்கள்.  கருத்தடைக்கு பிரச்சாரம் செய்த நம்ம நாட்டுல இப்ப கருவுறுதலுக்கு மருத்துவமனைகள் பெருகி கொண்டிருக்குது.’ மூச்சு வாங்கியது சின்னானுக்கு. 

‘என்ன பேசி என்ன ஆக போகிறது மச்சான்... இதோ நாமும் எரிஎண்ணை ஊற்றிய வண்டியில் தான் போகவேண்டும். இங்கிருந்து வீட்டிற்கு நம்மால் மிதிவண்டியில் செல்ல முடியாது. அதற்கு பாதையும் பாதுகாப்பும் வேண்டும். இருப்பதெல்லம் பெரிய வாகனங்கள் செல்ல மட்டுமே பயன்படும் சாலைகள். நாமெல்லாம் சூழ்நிலை கைதிகள். சமூகத்தின் வளர்ச்சி அப்படி இருக்கிறது. அந்த வளர்ச்சி நல்ல முறையில் இருக்க வேண்டும். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் வாழ்க்கையை இழந்துகொண்டு இருக்கிறோம்.’

கீழே இறங்கி வண்டிக்கு வந்த போது இலேசாக இருட்டி இருந்தது. பௌர்ணமி முழு நிலவு மேலெழுந்து வந்து கொண்டு இருந்தது.

‘பேசிக்கொண்டே நிறைய நடந்துட்டமோ மச்சான்? நாளைக்கு வர முடியுமானு தெரியலை.’

‘நாளை வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று சிறிது நடக்கலாம். மறுநாள் இங்கே வரலாம்.’

வண்டியில் ஏறி வீட்டிற்கு செல்லும் போது வானத்தில் நிலவும் அவர்களோடு சென்றது நான் துணையாக இருக்கின்றேன் என்று.

நான்கு ஆண்டுகள் கடந்த போது, முதல் மகன் அறிவு பிறந்த பிறகு வேலையின் காரணமாக அவர்கள் நியூசெர்சி மாநிலத்திற்கு குடியேறி இருந்தார்கள்.

‘அம்மா... தம்பியோட கையெல்லாம் குட்டிகுட்டியா இருக்குமா.’ அறிவு தன் மூன்று மாத வயதுடைய தம்பி அன்புவிடம் விளையாடி கொண்டிருந்தான். 

‘ஒரு மாதமாக வீட்ட சுற்றி பனியா கிடக்குது. வெளியிலேயே போக முடியல. இந்நேரம் அர்க்கன்சாவுல இருந்திருந்தால் வெளியில எங்கயாவது மலைகளில் சுத்தலாம்.’

‘இது இரண்டையும் வைத்துக்கொண்டு இனிமே எங்க சுத்துறது?’

‘அம்மா… நான் வெளியே போய் பனிமனிதன் செய்து விளையாடவா?’, அறிவு இடையில் குறுக்கிட்டு கேட்டான். 

‘நேற்று தானே விளையாடினாய். இன்றைக்கும் விளையாடினால் ஒத்துக்கொள்ளாது. சளி பிடிக்கும். நாளை வெயில் அடிக்கட்டும் விளையாடலாம்.’

‘வானதி… ஏற்கெனவே நாம பேசின மாதிரி ஒரு பெண் குழந்தையை தத்து எடுக்கலாமா?’

‘என்ன பெண் குழந்தை இல்லைனு குறையா இருக்கா?
மூனாவதா ஒன்னு பெத்துகிறது. ஆனால் இன்னும் ஒன்று பெற்றுக்கொள்வதை நினைக்கவே முடியவில்லை. அறிவு வயிற்றில் இருக்கும் போது நான்கு மாதங்கள் மருத்துவர் படுக்கையில் ஓய்வில் இருக்க சொல்லி  இருந்தேன. வெளியே போக முடியாமல் எவரையுமே பார்க்க முடியாமல். உடல் வலியோடு படுத்தே இருந்தது நரக வேதனை. நீங்கள் தான் பாவம். சமையல், வீட்டு வேலை, அலுவலக வேலை என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு யாருமே இல்லாமல் நிறைய சிரமபட்டிங்க.’

‘ஆமாம்… சிரமமாக தான் இருந்தது. நல்ல வேலை அப்போது அலுவலகத்தில் வேலை குறைவாக இருந்தது. அதெல்லாம் ஒரு அனுபவம்தான். மனைவியின் பார்வையின் வழியாக குடும்பத்தை அறிய முடிந்தது. நானாவது அலுவலகம் கடைகள் என்று வெளியே சென்று வருவேன். ஆனால் உனக்குத்தான் தொலைக்காட்சி தொலைபேசியை தவிர எதுவும் பொழுதுபோக்கு  இல்லாமல் நீ உடல் வலியோடு தனிமையில் சிரமப்பட்டாய். அதுவும் தொலைக்காட்சியில் எதுவும் பார்க்கும்படியாகவா இருக்கு. நல்ல வேலை அறிவின் பிறப்பின் போது அத்தை வந்தார்கள். அதற்கு பிறகு அவனது ஒரு வயது வரை எனக்கும் சரியான தூக்கம் கிடையாது. இரவெல்லாம் அழுவான். பகலில் தூங்குவான். விடிந்ததும் தூக்க கலக்கத்தில் நான் அலுவலகம் செல்லவேண்டும். ஆனால் அன்பு தான் எந்த பிரச்சனையும் கொடுக்காமல் பிறந்து இருக்கானே.’

‘ஆமாம். சின்னவர் அமைதியாக இருக்கார்ல… ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. இதையெல்லாம் நினைத்துமா உங்களுக்கு இன்னொரு குழந்தை வேண்டும்.’

‘ஆக... பேச்சை மாற்றாதே…’

‘சும்மா, ஒரு பேச்சுக்கு சொன்னேன். அம்மா ஒரு இல்லத்துல சொல்லி இருக்காங்க. முதலில் அவங்களும் ஏன் இந்த தேவையில்லாத வேலைனு சொன்னாங்க. நான் தான் சமாளித்து வைத்திருக்கிறேன். இந்த ஆண்டு ஊருக்கு போகும் போது பார்க்கலாம் மச்சான். ஆமா... அவளுக்கு என்ன பெயர் வைக்க போறிங்க?’

‘அரும்பு. எப்படி இருக்கு…?’

‘அறிவும் அன்பும் சேர்ந்து அரும்பு வா…?’

‘இல்லை, மொட்டுக்கு இன்னொரு பெயர் அரும்பு.’

‘அருமை…’

--முற்றும்--

( வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை இலக்கியக் குழுவின் சிறுகதைப் போட்டிக்காக மார்ச் 2022 ல் எழுதியது. -- அமல் யாகுலசாமி )

செந்திரு ஆகிவிட்டாள் - சூடாமணி - சிறுகதை திறனாய்வு


---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 19 நவம்பர் 2020 அன்று விவாதித்தது.

---

சாரு நிவேதிதாவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி - சிறுகதை - திறனாய்வு

31 Oct 1984 புதன்கிழமை அன்று இந்திராகாந்தி இறந்த நாள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற கொள்கையுடைய இந்தியா முழுவதும் ஒரு பதற்ற நிலை. அப்போது தில்லியில் ஒரு பகுதியில் நடந்த பேரழிவு தான் இந்த கதை, சாரு நிவேதிதாவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி.

நாட்டை காப்பாற்ற உயிர்விட்டவனின் குடும்பத்தை காப்பாற்ற முடியாத இயலாமை. அரசியல் அடிபொடிகளின் மனிதாபமற்ற செயலால் மனிதர்கள் மேல் நிகழ்த்திய வெறியாட்டத்தை பதிவுசெய்த கதை இது.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 29 அக்டோபர் 2020 அன்று வாசித்தது - அமல்

---


ஜெயகாந்தனின் இல்லாத்து எது - சிறுகதை - திறனாய்வு

மானுடத்தின் பேராற்றலை அருமையாக ஒரு சிறு நிகழ்வின் மூலம் விளக்கும் சிறுகதை இது.

கடவுளை தேடும் ஆஸ்திகன், கடவுளை மறுக்கும் நாத்திகன். கடவுளின் ஆற்றலை அறிய முயலும் விஞ்ஞானி, இந்த மானுடர்களின் அறிவே அவர்களுக்கு பலம். கடவுளின் ஆற்றல் மனிதனின் அறிவை விட பலம் மிக்கதாக இருக்கலாம், ஆனால் அதை அறிய மனிதனால் முடியும். அதை வெல்ல மனிதன் முயன்று கொண்டே இருப்பான். – கடவுளை பற்றிய சிறப்பான விளக்கம்.

பைபிளில் வரும் நோவாவின் பேழை, தமிழர்களின் கல்வெட்டுகள், பனையோலை சுவடிகள் என எல்லாமே அடுத்த தலைமுறைக்கு மனிதனின் அறிவை கடத்திதானே நாம் இன்று இவ்வளவு வளர்ந்துள்ளோம்.

தஞ்சாவூர் சரஸ்வதிமகாலில் உள்ள ஓலைச்சுவடிகளின் மின்னனுவாக்கம், கடவுளின் துகள் (Higgs boson - https://en.wikipedia.org/wiki/Higgs_boson),  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆழ்நீர் தகவல் சேகரிப்பான் (Project Natick- https://natick.research.microsoft.com/) என நாம் ஆராய்ச்சி செய்யும் எல்லாமே அடுத்த தலைமுறைக்குத்தானே.

மனிதனின் அறிவால் மரணத்தை வெல்ல முடியாது. ஆனால் மனிதனின் அறிவு தலைமுறை தலைமுறையாக கடந்து செல்லும். அதனால் மானுடம் மரணத்தை வெல்லும். எனவே அவனிடம் இல்லாதது என்று எதுவும் இல்லை. – மனிதனை பற்றிய சிறப்பான விளக்கம்.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 08 அக்டோபர் 2020 அன்று வாசித்தது - அமல்

---

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0198.pdf 

புலமைபித்தனின் செல்லம்மாள் - சிறுகதை - திறனாய்வு

இரண்டாம் உலகப்போர் உச்சகட்டமாகா இருக்கும்போது வெளியான கதை எழுத்தாளர் புலமைபித்தனின் செல்லம்மாள். உணவு மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தும் போர் நடக்கும் இடங்களுக்கு அனுப்ப பட்டு, இந்தியாவில் பஞ்சம் நிறைந்த காலம் அது.

பிரமநாயகம், கிராமத்தில் முதல் தலைமுறையாக படித்து சென்னையில் குறைந்த ஊதியம் அதிக வேலையுடன் வாழ்பவன்.

செல்லம்மாள், கிராமத்தில் சுற்றத்தாரோடு மகிழ்ச்சியாக கோவில் கோபுரத்தில் வாழும் புறாவாக வாழ்ந்தவள், சென்னையில் ஊரைத்தாண்டிய ஒரு வீட்டில் பிரமநாயகத்துடன் கூண்டு புறாவாக தனிமையில் வாழ்கிறாள்.

அவர்களுக்கு குழந்தையில்லை. அவனுக்கு அவள்தான் குழந்தை,அவளுக்கு அவன்தான் குழந்தை.

பிரமநாயகத்தின் இயலாமை, செல்லமாளின் தனிமை மற்றும் குழந்தையின்மையின் பிரச்சனைகளின் இறுதியில் செல்லம்மாள் நோயில் இறக்கிறாள். மகிழ்ந்திருந்த காலத்தில் குறைந்த எடையாக தெரிந்தவள், இறந்த துக்கத்தில் அவளை தூக்க முடியவில்லை.

கோவில் கோபுரத்தில் வாழும் புறாவாக வாழ்ந்தவள், இப்பொழுது ஊசிகோபுரத்தில் திரிசங்குக்கிரக மண்டலமாக வாழ்கிறாள். இறுதியில் இரட்டை சங்கு முழங்க பிரமநாயகம் செல்லம்மாளுடன் இணைகிறான்.

ஒரு காதல் கதையின் இறுதியில் ஒருநாளில் நடக்கும் கதை. இக்கதை என் வாழ்க்கையின் ஒரு பகுதி. அமெரிக்காவில் வாய்ப்புகள் இருந்ததால் நாங்கள் மீண்டு வந்தோம். ஆனால் கதை எழுதி 60 ஆண்டுகள் கடந்து, அமெரிக்காவிற்கு  H4 விசாவில் வந்த பெரும்பாலானோற்கு உள்ள அனுபவம் இந்த தனிமை. எதிர்காலத்தில் நம் பேரப்பிள்ளைகள் செவ்வாய் கிரகத்துக்கு குடிபோனாலும் இதையே அனுபவிப்பர்.

இந்த கதையை படிக்கும்போது ஊரில் உள்ள வயதான என் அம்மாவின் நினைவு வந்தது. அப்பா மற்றும் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதால் ஆறுதல் அடைந்தேன்.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 17 செப்டம்பர் 2020 அன்று வாசித்தது - அமல்

---

புதுமைப்பித்தன் படைப்புகள் - சிறுகதைகள்; தொகுப்பு - 1  - 2. செல்லம்மாள்

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0389_01.pdf


அற்புதங்கள் ஆயிரம் - சிறுகதை - அமல்

தம்பி திருமணத்திற்கு ஜாமான் வாங்க ஜெனிட்டா கடைக்கு போயாச்சு. இந்த இரண்டு பசங்களை மேய்க்கனுமே.
நான், “ஜெனிட்டா, நாங்க  வீட்டிலிருந்து பீச்க்கு போறோம்”

ஜெனிட்டா, ’எப்படி போறிங்க?, ஆட்டோலயா?’
’இல்ல நடந்துதான் போறம்’
’முடியுமா? 3 கிலோமீட்டர் ஆச்சே?’
’எல்லாம் முடியும், முயற்சி பண்றோம்.’
‘சரி பாத்து போய்ட்டு வாங்க’, ‘பசங்கள பாத்துக்கங்க’
‘ஏய் செருப்ப போடுங்க, கிளம்பலாம்’

கிளம்பும்போது மாலை 3 மணி.
’அப்பா ஜிபிஸ் போட்டாச்சா, எவ்வளவு நேரம் ஆகும்?’
‘போட்டாச்சு, 50 நிமிசம் ஆகும்.’
’அப்பா, இங்க பாருங்க. கார்ல கண்ணாடியும் இல்ல கதவும் இல்ல’
‘இது உடைந்த காருடா, சரி பண்ண வச்சிருக்காங்கட’

’அப்பா அங்க பாருங்க ஸ்னோ பால் புறாக்குட்டி’ என்று சொல்லிக்கொண்டு காலி மனையில் கிடந்த குப்பை மேல்  இருந்த பெரிய புறாக்கூட்டத்தில் ஒரு வெள்ளை புறாவை துரத்திக்கொண்டு  ஆல்வின் ஓடினான்.

’அப்பா இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ஆலன் கேட்டான்.’
’40 நிமிடம்டா.’

’அப்பா அங்க பாருங்க லைக்காவோட குட்டி நாய்.’
’இங்க பாருங்க 3 நாய் குட்டிங்க. அப்பா ஒன்னு வீட்டுக்கு எடுத்து போலாமா.’
’வேண்டாம்டா. ’

’அப்பா அங்க பாருங்க எவ்ளோ பெரிய யானை சாமி. ஏப்பா நிறைய சாமி இருக்கு.’
’வெள்ளிக்கிழமை புள்ளையார் சுத்தி வருதுல்ல அதுக்குதாண்டா. சாமிகும்புடுவாங்கள.’

’ஏன் சாமிமேல பெயிண்ட் அடிக்கிராங்க.’
’அப்பாதான அழகா இருப்பாங்க.’

’ஏன் இந்த சாமியெல்லாம் சின்னசின்னதா இருக்கு. அதெல்லாம் பெரிசா இருக்கு.’
’சின்ன சாமியெல்லாம் குறைந்த விலைக்கு விப்பாங்க. பெரிய சாமியெல்லாம் நிறைய விலைக்கு விப்பாங்க.’


’அப்பா இங்க பாருங்க செத்துபோன பெரிச்சாலி நசுங்கி கிடக்கு.’
’ஏய் கிட்ட போகாதிங்க நாறும்.’

’அப்பா மாட்ல பால் கரக்குராங்க பாருங்க.’
ஆல்வின், ‘மாட்டு பின்னாடிதான் கரப்பாங்களா. மாட்டு மூச்சாதான் பாலா. அய்ய.’
’எலே கிட்ட போகாதிங்க.’

’அப்பா இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு.’
’10 நிமிடம்டா.’

’ஏன் இவ்லோ பெரிய ஏணி மாதிரி வச்சிருக்காங்க.’
’வீடு கட்ராங்கள. மேல போய் கட்டனும்ல.’

’அப்பா தண்ணி வேணும்.’
’இந்தா உன்னோட தண்ணி பாட்டில்.’

’அப்பா நாலு காரு இருக்கு பாருங்க.’

’அப்பா கடைல ஐஸ்கிரீம் இருக்கு, சாப்டலாமா.’
’வேண்டாம்டா, கடல முட்டாய், ரொட்டி எடுத்து வந்திருக்கேன் சாப்பிடுரிங்களா.’
’ஆல்வின், ஐய் கல்ல முட்டாய் எனக்கு வேணும்.’



’அப்பா அங்க பாருங்க, கடல்ல தண்ணி தெரியுது.’
’சீக்கிரம் வாங்க விளையாடலாம்.’

’அப்பா நேத்து காலைல நண்டு குஞ்சல்லாம் பிடிச்சம்ல. இப்ப காணோம்.’
’இப்ப சாங்கியாலம் ஆச்சில அதல்லாம் சாப்பிட்டுட்டு தூங்க போயிருக்கும்.


சரி தண்ணி கிட்ட போகாதிங்க. மணல கோயில் கட்டி விளையாடுங்க. ’
’அப்பா தஞ்சாவூர்ல பெரிய கோயில் போனோம்ல, அது மாதிரி கட்டலாமா.’
’சரி கட்டுங்க, எதாவது ஐடியா வேணும்னா கேளுங்க.’
’பக்கத்திலேயே மண் எடுத்து போடாதிங்க. பெரிசா கட்டனும்ல. கொஞ்ச தூரத்திலிருந்து கையால தள்ளிட்டு போங்க.’

கொஞ்ச நேரத்தில பசங்கள் சோர்ந்துவிட்டார்கள்.

’ஏய் தண்ணி வேணுமா.’
ஆலன், ‘வேணுப்பா.’
’கல்ல முட்டாய்.’
’கொடுங்க.’

’சரி நானும் கட்டவா.’
’சரிப்பா வாங்க பெரிசா கட்டலாம்.’

’மண்ணலாம் அள்ளிட்டு வாங்க. நல்லா குமிச்சி வைங்க.’
’கோயில்ல படிபடியா  கட்டனும்ல. ஏதாவது கட்டை இல்லனா குச்சி எடுத்து வாங்க.’

’அப்பா ஒன்னும் காணோப்பா. இந்த செருப்ப வச்சி பண்ணலாமா.’
’சரி நான் செஞ்சி காட்டுறேன். அது மாதிரி செய்யுங்க. ’



ஆல்வின், ’அப்பா கோயிலு என்னோட பெரிசு இருக்கு. ’


’சரி கோயில சுத்தி மதில் சுவர் கட்டுங்க.’
’காம்போண்டாப்பா.’
’ஆமா’
’வாசப்படி வைக்கவா.’
’வைங்க.’
’இதலெல்லாம் என்னடா.’
’மாடு சாமி’
’நந்தியா’
’ஆமாம்’



’சரி நில்லுங்க போட்டோ எடுப்போம்’

’வாங்க , கை காலெல்லாம் அலையில கழுவுவோம்.’

’இந்தா தண்ணி குடிங்க கிளம்புவோம்.’

’செருப்பு போட்டாச்சா.’

’அப்பா இங்க பாருங்க குளத்தில மீன் இருக்கு பிடிக்கலாமா.’

’ரொம்ப பள்ளமா இருக்கு. வேண்டாம்.’

’யாரோ ஒருவர், சார் இதுல கார் போகுமா. ’

’இல்ல சார்  புதுசா போட்ட ரோடு. மழை பேஞ்சு
சேரும் பள்ளமா இருக்கு.’

’சார் கரும்பு ஜுஸ் குடிச்சிட்டு போங்க. புது கரும்பு.’

ஆசையாக இருந்தது. இப்பதான் அமெரிக்காவுலேந்து வந்திருக்கிற பசங்களா நினைத்து வேண்டாமென்றேன்.

’இளநீ குடிப்போமா.’

ஆலன், ’அப்பா எனக்கு ரெண்டு வேணும்.’

’முதல ஒன்னு குடி’

’சார் தண்ணியா வழுக்கையா.’

’வழுக்கை’

’சரி வீட்டுக்கு போவோமா மணி 5 ஆயிரிச்சி.’



விண்ட் பிளவர் சொகுசு விடுதி அருகே வரும்போது 3 தமிழ் நாடு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

’என்ன சார் கூட்டமா’

’ஆமா தினகரனோட எம்மல்யே எல்லாம் மீட்டிங் போடுராங்க.’

’நல்லா பேசட்டும் சார். ஆடி பதினெட்டுக்குதான் காவிரி ஆத்துல தண்ணி வரல. புள்ளையார் சுத்திக்காகவாது தண்ணி வரட்டும்.’

’சரி சரி சீக்கிரம் கிளம்புங்க.’

’அப்பா ஏப்பா போலீஸெல்லாம் நிக்கிராங்க. திருடங்க இருக்காங்களா. ’

’எலே. சத்தமா சொல்லாதடா.’

’அப்பா அங்க பாருங்க மூனு மாடுங்க வருது.’

’இரு நாய்களுடன் ஒரு அம்மா மாடு மேய்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.’

’அப்பா நான் பால் கரக்கட்டுமா.’

ஆல்வின், ‘மாட்டுக்கிட்ட போகாத. முட்டும்’

’பின்னாடிதானே போறேன்.’

’உதைக்கும்டா.’

10 நிமிடம் கழித்து மாடுகள் ஒரு தெருவில் திரும்பி சென்றன.

’ஆல்வின், நாம நேரா போகனும்.’

’அப்பா மாட்டெல்லாம் அவங்க வீட்ல விட்டுட்டு வருவோம்.’

’இல்ல நேரமாச்சு. வா போகலாம்’

’அப்பா நடக்க முடியல.’

ஆல்வின் குத்துகாலிட்டு உட்கார்ந்திருந்தான்.

’ஏய் எந்திரி. இன்னும் 10 நிமிடம் தான். வீடு வந்திரும்.’

’முடியலப்பா.’

’சரி இந்தா கல்ல முட்டாய்.’

’இந்தா தண்ணி குடி’

’சரி வா போகலாம்’

5 நிமிடம் கழித்து

ஆல்வின், ‘அப்பா முடிலப்பா.’

’சரி அப்பா மேல உக்காரு’

’ஆல்வின், தூக்க முடியலடா. நடக்கிறியா.’

’சரிப்பா’

வீடு வந்தபோது 6 மணி. சூரியன் மறைந்திருந்தன்.

குளித்துவிட்டு அமர்ந்த போது. ஆல்வின் கேட்டான். நாளைக்கு காலைல கடலுக்கு போயி நண்டு படிப்போமா.
...