பனைமரச் சாலை - காட்சன் சாமுவேல் - புத்தக அறிமுகம்

தமிழின் இலக்கியம் மற்றும் தமிழர்களின் வளர்ச்சியை நாம் ஆராயும் போது கல்வெட்டுகள் செப்பேடுகளை விட அதிகமாக கிடைத்திருப்பது ஓலைச்சுவடிகள். அதுதான் பழங்கால மக்கள் அதிக அளவில் பயன்படுத்தியது. தமிழ் மண்ணில் எளிதாக அதிக அளவில் கிடைத்தது. தமிழ் இலக்கியங்களை படைக்க அவ்வளவு பேர் இருந்த போது, அதை மக்களிடம் பரவலாக்க பனை ஓலை சுவடிகளை தயாரிக்க என்று ஒரு இனம் இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை இருந்திருக்க வேண்டும். அதை அறிய அதை நோக்கிய ஒரு பயணம்தான் இந்த பனைமரச் சாலை. காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம், உப்பு வேலி மூலம் இந்தியர்களை சுரண்டிய ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய தண்டியாத்திரை போல, பாராமுகத்துடன் ஒரு இனத்தின் வாழ்வாதாரத்தை அழித்து பனங்காட்டை அழித்த இந்த ஆட்சியரின் பார்வைபட, ஒரு மக்களியக்கமாக உருவாகி பனையையும் அதன் கிராம பொருளாதாரத்தை மீட்க, மும்பையிலிருந்து தமிழகத்தில் உள்ள நாகர்கோவில் வரை 3000 கிலோமீட்டர் தூரம், கிராமங்கள் வழியாக புல்லடில் தனியொருவராக போதகர் காட்சன் சாமுவேல் சென்ற பயணம்தான் இந்த பனைமரச் சாலை. வெளிநாட்டு மதுவகையால், சாராயத்தால் கருவூலத்தை நிரப்பிய அரசுகள் பனையை பயன்படுத்தாமல் எப்படி மக்களின் செல்வத்தையும் உடல்நலத்தையும் கெடுத்து உரமேரிய உடலையும், கருவுறும் தன்மையையும் அழித்து, குடும்ப கட்டுப்பாடுக்கு விளம்பரம் செய்த ஊரில் குழந்தையின்மைக்கான மருத்துவ மனைகளை வளர்த்து, எப்படி அதை நோக்கி மக்களை போகச் செய்தது என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய இணைய தளத்தில் 2016ம் ஆண்டு பனைமரச் சாலை பற்றிய வலைப்பதிவை அறிமுக படுத்தினார். அப்போது படித்த எனக்கு, என் ஆழ்மன நினைவுகளை கிளர்ந்தெழ செய்தது இவரது பயணம். சென்ற ஆண்டு 2019 ஆகஸ்டு மாதம் தஞ்சை புத்தக காட்சியில் குடும்பத்தோடு சென்று வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்த புத்தகம் என் வாழ்க்கையின், என் பரம்பரையின் ஒரு பகுதி. அரசின் அரைவேக்காட்டுத்தன முடிவால் கள்ளுக்கடைகளை மூடி பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களில் ஒருவன் நான். நான் பிழைத்து வளர்ந்தது என் பெற்றோர் செய்த புண்ணியம். நான் மதியை மயக்கும் மது எந்த வகையில் இருந்தாலும் எதிர்ப்பவன். அது தேவாலயத்தில் கொடுக்கும் திராட்சை ரசமாக இருந்தாலும். அது புளித்தது என்பதால். என் கையருகில் உலகில் உள்ள அத்தனை மது வகைகளும் இருந்தாலும் அதன் சுவை அறியாதவன், நண்பர்கள் மத்தியில் அதிக அழுத்தம் எனக்கு இருந்தாலும் மதுவை சுவைக்காதவன். ஆனால் சிறு வயதில்

ஒற்றை மர புதிய கள்ளின் சுவை அறிந்தவன். பதனீரின் பக்குவம் தெரிந்தவன். கள் சேர்த்த ஆப்பத்தை சுவைத்தவன். கட்டை விரலால் நுங்கு சுளையை நோண்டி சுவைத்தவன். நுங்கு வண்டி ஓட்டியவன். ஓலை காற்றாடி செய்து விளையாடியவன். குருத்தோலை பவனி வருபவன். பனம் பழத்தை பிழிந்து குடித்தவன். விதையில் முளைத்த இனிய பூவை சுவைத்தவன். விதையை முளைக்க வைத்து கிழங்கை தின்றவன்.

அப்பா பனங்கையை கொண்டு வீடு கட்டியவர். ஓலை கூரை வேய்தவர். பனமட்டை அவுனியால் மரமேறும் தலை கயிறு, அரிவாள் பெட்டி செய்தவர். தாத்தா மரத்திலிருந்து தவறி விழுந்து அப்பாவின் ஐந்து வயதில் இந்த உலகை விட்டுச் சென்றவர்.

எங்கள் வீடு தஞ்சாவூரில் பனங்காடு என்ற கிராமத்தில் உள்ளது. எங்கள் வீட்டு பனைமரத்தில் அப்பாவால் முடிந்த வரை நுங்கு பறித்து எங்களுக்கு கொடுத்தார். சிறுவயதில் மரமேறிய எனக்கு இப்போது பழக்கம் மறந்தது. மரமேறி மரத்துப் போயிருந்த என் கை, கால், கணினி மென்பொருள் வேலையால் மென்மையானது. இப்போது நுங்கு பறிக்க ஆளில்லை. அதுவாக பழம் எப்போது விழும் என்ற காத்திருப்பு.

இந்த புத்தகம் ஒரு அழியா ஆவணம், ஒரு சிறு துளியிலிருந்து ஆட்சியர் மற்றும் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்தி பெருவெள்ளமாக மாறும். பனங்காட்டை அழித்து தார் சாலை போட்டாலும் அது முளைத்து இயேசுவை போல உயிர்த்தெழும். அப்போது பனங்காடுகள் செழுமை ஆகியிருக்கும். மண்ணில் நீர் மட்டம் உயர்ந்திருக்கும். பனை உணவுகள் மிகுந்திருக்கும். அதனால் கிராம பொருளாதாரம் உயர்ந்திருக்கும். நம் உடல் நலம் உயர்ந்திருக்கும். மனித உயிர் காக்க, மரமேற தானியங்கி எந்திரம் இருக்கும். அதை என் மகனே கண்டுபிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழரின் மேன்மை, கிராம பொருளாதாரம், அனைத்து மத ஆன்மீகம் என பலவற்றையும் அறிய நாம் படிக்க வேண்டிய புத்தகம் பனைமரச் சாலை.

சீீீீீனர்களின் பட்டுச் சாலை போல தமிழர்களின் பனைமரச் சாலை. எழுத்தாளர் ஜெயமோகனின் பனிமனிதன் புத்தகத்தை போல இது அற்புதமான பனை மனிதனின் புத்தகம்.

இறுதியாக ஏனோ வேள்பாரி நாவலில் வரும்

‘பனையன் மகனே பனையன் மகனே

பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே’

என துவங்கும் பாடலை இங்கு பாட தோன்றுகிறது.


நன்றி.

- அமெரிக்க பனை நிலத்திலிருந்து (தென் கரோலினா மாநிலம்) அமல்.


---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூடுகையில் 10 டிசம்பர் 2020 அன்று புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசியது.

--- பனைமரச் சாலை - இணையத்தில் இலவசமாக https://pastorgodson.wordpress.com/2016/05/ பனைமரச் சாலை – வாங்க https://www.commonfolks.in/books/d/panaimara-saalai உப்பு வேலி https://ta.wikipedia.org/s/4kum

பனிமனிதன் https://thanjainadodi.blogspot.com/2020/07/blog-post.html

பட்டுச் சாலை https://ta.wikipedia.org/s/n6t



செந்திரு ஆகிவிட்டாள் - சூடாமணி - சிறுகதை திறனாய்வு


---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 19 நவம்பர் 2020 அன்று விவாதித்தது.

---

சாரு நிவேதிதாவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி - சிறுகதை - திறனாய்வு

31 Oct 1984 புதன்கிழமை அன்று இந்திராகாந்தி இறந்த நாள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற கொள்கையுடைய இந்தியா முழுவதும் ஒரு பதற்ற நிலை. அப்போது தில்லியில் ஒரு பகுதியில் நடந்த பேரழிவு தான் இந்த கதை, சாரு நிவேதிதாவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி.

நாட்டை காப்பாற்ற உயிர்விட்டவனின் குடும்பத்தை காப்பாற்ற முடியாத இயலாமை. அரசியல் அடிபொடிகளின் மனிதாபமற்ற செயலால் மனிதர்கள் மேல் நிகழ்த்திய வெறியாட்டத்தை பதிவுசெய்த கதை இது.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 29 அக்டோபர் 2020 அன்று வாசித்தது - அமல்

---


ஜெயகாந்தனின் இல்லாத்து எது - சிறுகதை - திறனாய்வு

மானுடத்தின் பேராற்றலை அருமையாக ஒரு சிறு நிகழ்வின் மூலம் விளக்கும் சிறுகதை இது.

கடவுளை தேடும் ஆஸ்திகன், கடவுளை மறுக்கும் நாத்திகன். கடவுளின் ஆற்றலை அறிய முயலும் விஞ்ஞானி, இந்த மானுடர்களின் அறிவே அவர்களுக்கு பலம். கடவுளின் ஆற்றல் மனிதனின் அறிவை விட பலம் மிக்கதாக இருக்கலாம், ஆனால் அதை அறிய மனிதனால் முடியும். அதை வெல்ல மனிதன் முயன்று கொண்டே இருப்பான். – கடவுளை பற்றிய சிறப்பான விளக்கம்.

பைபிளில் வரும் நோவாவின் பேழை, தமிழர்களின் கல்வெட்டுகள், பனையோலை சுவடிகள் என எல்லாமே அடுத்த தலைமுறைக்கு மனிதனின் அறிவை கடத்திதானே நாம் இன்று இவ்வளவு வளர்ந்துள்ளோம்.

தஞ்சாவூர் சரஸ்வதிமகாலில் உள்ள ஓலைச்சுவடிகளின் மின்னனுவாக்கம், கடவுளின் துகள் (Higgs boson - https://en.wikipedia.org/wiki/Higgs_boson),  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆழ்நீர் தகவல் சேகரிப்பான் (Project Natick- https://natick.research.microsoft.com/) என நாம் ஆராய்ச்சி செய்யும் எல்லாமே அடுத்த தலைமுறைக்குத்தானே.

மனிதனின் அறிவால் மரணத்தை வெல்ல முடியாது. ஆனால் மனிதனின் அறிவு தலைமுறை தலைமுறையாக கடந்து செல்லும். அதனால் மானுடம் மரணத்தை வெல்லும். எனவே அவனிடம் இல்லாதது என்று எதுவும் இல்லை. – மனிதனை பற்றிய சிறப்பான விளக்கம்.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 08 அக்டோபர் 2020 அன்று வாசித்தது - அமல்

---

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0198.pdf 

புலமைபித்தனின் செல்லம்மாள் - சிறுகதை - திறனாய்வு

இரண்டாம் உலகப்போர் உச்சகட்டமாகா இருக்கும்போது வெளியான கதை எழுத்தாளர் புலமைபித்தனின் செல்லம்மாள். உணவு மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தும் போர் நடக்கும் இடங்களுக்கு அனுப்ப பட்டு, இந்தியாவில் பஞ்சம் நிறைந்த காலம் அது.

பிரமநாயகம், கிராமத்தில் முதல் தலைமுறையாக படித்து சென்னையில் குறைந்த ஊதியம் அதிக வேலையுடன் வாழ்பவன்.

செல்லம்மாள், கிராமத்தில் சுற்றத்தாரோடு மகிழ்ச்சியாக கோவில் கோபுரத்தில் வாழும் புறாவாக வாழ்ந்தவள், சென்னையில் ஊரைத்தாண்டிய ஒரு வீட்டில் பிரமநாயகத்துடன் கூண்டு புறாவாக தனிமையில் வாழ்கிறாள்.

அவர்களுக்கு குழந்தையில்லை. அவனுக்கு அவள்தான் குழந்தை,அவளுக்கு அவன்தான் குழந்தை.

பிரமநாயகத்தின் இயலாமை, செல்லமாளின் தனிமை மற்றும் குழந்தையின்மையின் பிரச்சனைகளின் இறுதியில் செல்லம்மாள் நோயில் இறக்கிறாள். மகிழ்ந்திருந்த காலத்தில் குறைந்த எடையாக தெரிந்தவள், இறந்த துக்கத்தில் அவளை தூக்க முடியவில்லை.

கோவில் கோபுரத்தில் வாழும் புறாவாக வாழ்ந்தவள், இப்பொழுது ஊசிகோபுரத்தில் திரிசங்குக்கிரக மண்டலமாக வாழ்கிறாள். இறுதியில் இரட்டை சங்கு முழங்க பிரமநாயகம் செல்லம்மாளுடன் இணைகிறான்.

ஒரு காதல் கதையின் இறுதியில் ஒருநாளில் நடக்கும் கதை. இக்கதை என் வாழ்க்கையின் ஒரு பகுதி. அமெரிக்காவில் வாய்ப்புகள் இருந்ததால் நாங்கள் மீண்டு வந்தோம். ஆனால் கதை எழுதி 60 ஆண்டுகள் கடந்து, அமெரிக்காவிற்கு  H4 விசாவில் வந்த பெரும்பாலானோற்கு உள்ள அனுபவம் இந்த தனிமை. எதிர்காலத்தில் நம் பேரப்பிள்ளைகள் செவ்வாய் கிரகத்துக்கு குடிபோனாலும் இதையே அனுபவிப்பர்.

இந்த கதையை படிக்கும்போது ஊரில் உள்ள வயதான என் அம்மாவின் நினைவு வந்தது. அப்பா மற்றும் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதால் ஆறுதல் அடைந்தேன்.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 17 செப்டம்பர் 2020 அன்று வாசித்தது - அமல்

---

புதுமைப்பித்தன் படைப்புகள் - சிறுகதைகள்; தொகுப்பு - 1  - 2. செல்லம்மாள்

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0389_01.pdf


பனிமனிதன் - நாவல் - திறனாய்வு


ஸ்டார் லிங்க், எலன் மஸ்கின் திட்டம், 42 ஆயிரம் துணைக்கோள்களை பூமிபந்து முழுவதும் வலைபோல வானில் பரப்பி இணையத்தால் இணைத்தல். அப்பொழுது இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்களின் அறிவு முழுக்க ஒன்றிணையும். இது எவ்வளவு பெரிய கனவுத்திட்டம். இந்த விதமான அறிவுக்கும் ஆன்மீகத்திற்குமான விவாதம்தான் இந்த புத்தகம். அதற்கேற்ப இந்த புத்தகத்தில் மூன்று கதாபாத்திரங்கள். அறிவு – பாண்டியன், ஆன்மீகம் – கிம், இரண்டும் கலந்த டாக்டர் திவாகர்.
பனிமனிதர்கள் வாழுமிடம் ஒரு பெரிய காடு. அந்த காட்டில் ஒரு உயிரினம் பனிமனிதன். அதைப்போல அங்கே பல்லாயிரக்கணக்கான  உயிரினங்கள். அந்த எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஆழ்மனம். அந்த காடு பைபிளில் உள்ள ஆதாம் ஏவாளின் தோட்டம் போன்றது. அவதார் படத்தில் வரும் காடு போன்றது. ஒரு சிறிய மலைக்கிராமத்தின் பெரிய வடிவம். அதனால் கிம்மால் எளிதாகா பனிமனிதர்களுடன் இணைய முடிகிறது. அவன் தூய மனம் கொண்ட புத்தனாகிறான். இறுதியில் பாண்டியனுக்கும், திவாகருக்கும் நீண்ட விவாதம். அதிலிருந்து எவ்வளவு தூரம் இயற்கையிலிருந்து விலகி வந்து கூண்டு மனிதர்களாக நாம் மாற்றமடைந்துள்ளோம்  என அறியலாம். பாண்டியன் பனிமனிதனை உலகுக்கு தெரிவிக்கும் எண்ணத்தை விடுகிறான். அவன் எடுத்து வந்த விலை உயரந்த வைரங்களை தூக்கி எறியும் போது அறிவை ஆன்மீகம் வெற்றிகொள்கிறது. அந்த அறிவின் தோல்விதான் அதற்கு அழகு. அப்பொழுதுதான் அது அடுத்த தேடலை நோக்கிச்செல்லும். அதுதான் அறிவியல்.
பாண்டியனின் இந்த மனமாற்றம் நமக்கு இந்த திருக்குறளை நினைவூட்டும்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
பாண்டியன் ஒவ்வொரு விருப்பங்களாக இழந்து ஆன்மீகம் நோக்கி செல்கிறான். அதுதான் ஆன்மீகம்.
----------
குறிப்பு; என் மகன் ஆலன் இந்த நாவலை தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்லியுள்ளான். அதன் இணைப்புகள்,

பனி மனிதன்- தமிழ்

Pani Manithan - ஆங்கிலம்