பனிமனிதன் - நாவல் - திறனாய்வு


ஸ்டார் லிங்க், எலன் மஸ்கின் திட்டம், 42 ஆயிரம் துணைக்கோள்களை பூமிபந்து முழுவதும் வலைபோல வானில் பரப்பி இணையத்தால் இணைத்தல். அப்பொழுது இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்களின் அறிவு முழுக்க ஒன்றிணையும். இது எவ்வளவு பெரிய கனவுத்திட்டம். இந்த விதமான அறிவுக்கும் ஆன்மீகத்திற்குமான விவாதம்தான் இந்த புத்தகம். அதற்கேற்ப இந்த புத்தகத்தில் மூன்று கதாபாத்திரங்கள். அறிவு – பாண்டியன், ஆன்மீகம் – கிம், இரண்டும் கலந்த டாக்டர் திவாகர்.
பனிமனிதர்கள் வாழுமிடம் ஒரு பெரிய காடு. அந்த காட்டில் ஒரு உயிரினம் பனிமனிதன். அதைப்போல அங்கே பல்லாயிரக்கணக்கான  உயிரினங்கள். அந்த எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஆழ்மனம். அந்த காடு பைபிளில் உள்ள ஆதாம் ஏவாளின் தோட்டம் போன்றது. அவதார் படத்தில் வரும் காடு போன்றது. ஒரு சிறிய மலைக்கிராமத்தின் பெரிய வடிவம். அதனால் கிம்மால் எளிதாகா பனிமனிதர்களுடன் இணைய முடிகிறது. அவன் தூய மனம் கொண்ட புத்தனாகிறான். இறுதியில் பாண்டியனுக்கும், திவாகருக்கும் நீண்ட விவாதம். அதிலிருந்து எவ்வளவு தூரம் இயற்கையிலிருந்து விலகி வந்து கூண்டு மனிதர்களாக நாம் மாற்றமடைந்துள்ளோம்  என அறியலாம். பாண்டியன் பனிமனிதனை உலகுக்கு தெரிவிக்கும் எண்ணத்தை விடுகிறான். அவன் எடுத்து வந்த விலை உயரந்த வைரங்களை தூக்கி எறியும் போது அறிவை ஆன்மீகம் வெற்றிகொள்கிறது. அந்த அறிவின் தோல்விதான் அதற்கு அழகு. அப்பொழுதுதான் அது அடுத்த தேடலை நோக்கிச்செல்லும். அதுதான் அறிவியல்.
பாண்டியனின் இந்த மனமாற்றம் நமக்கு இந்த திருக்குறளை நினைவூட்டும்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
பாண்டியன் ஒவ்வொரு விருப்பங்களாக இழந்து ஆன்மீகம் நோக்கி செல்கிறான். அதுதான் ஆன்மீகம்.
----------
குறிப்பு; என் மகன் ஆலன் இந்த நாவலை தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்லியுள்ளான். அதன் இணைப்புகள்,

பனி மனிதன்- தமிழ்

Pani Manithan - ஆங்கிலம்