பனைமரச் சாலை - காட்சன் சாமுவேல் - புத்தக அறிமுகம்

தமிழின் இலக்கியம் மற்றும் தமிழர்களின் வளர்ச்சியை நாம் ஆராயும் போது கல்வெட்டுகள் செப்பேடுகளை விட அதிகமாக கிடைத்திருப்பது ஓலைச்சுவடிகள். அதுதான் பழங்கால மக்கள் அதிக அளவில் பயன்படுத்தியது. தமிழ் மண்ணில் எளிதாக அதிக அளவில் கிடைத்தது. தமிழ் இலக்கியங்களை படைக்க அவ்வளவு பேர் இருந்த போது, அதை மக்களிடம் பரவலாக்க பனை ஓலை சுவடிகளை தயாரிக்க என்று ஒரு இனம் இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை இருந்திருக்க வேண்டும். அதை அறிய அதை நோக்கிய ஒரு பயணம்தான் இந்த பனைமரச் சாலை. காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம், உப்பு வேலி மூலம் இந்தியர்களை சுரண்டிய ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய தண்டியாத்திரை போல, பாராமுகத்துடன் ஒரு இனத்தின் வாழ்வாதாரத்தை அழித்து பனங்காட்டை அழித்த இந்த ஆட்சியரின் பார்வைபட, ஒரு மக்களியக்கமாக உருவாகி பனையையும் அதன் கிராம பொருளாதாரத்தை மீட்க, மும்பையிலிருந்து தமிழகத்தில் உள்ள நாகர்கோவில் வரை 3000 கிலோமீட்டர் தூரம், கிராமங்கள் வழியாக புல்லடில் தனியொருவராக போதகர் காட்சன் சாமுவேல் சென்ற பயணம்தான் இந்த பனைமரச் சாலை. வெளிநாட்டு மதுவகையால், சாராயத்தால் கருவூலத்தை நிரப்பிய அரசுகள் பனையை பயன்படுத்தாமல் எப்படி மக்களின் செல்வத்தையும் உடல்நலத்தையும் கெடுத்து உரமேரிய உடலையும், கருவுறும் தன்மையையும் அழித்து, குடும்ப கட்டுப்பாடுக்கு விளம்பரம் செய்த ஊரில் குழந்தையின்மைக்கான மருத்துவ மனைகளை வளர்த்து, எப்படி அதை நோக்கி மக்களை போகச் செய்தது என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய இணைய தளத்தில் 2016ம் ஆண்டு பனைமரச் சாலை பற்றிய வலைப்பதிவை அறிமுக படுத்தினார். அப்போது படித்த எனக்கு, என் ஆழ்மன நினைவுகளை கிளர்ந்தெழ செய்தது இவரது பயணம். சென்ற ஆண்டு 2019 ஆகஸ்டு மாதம் தஞ்சை புத்தக காட்சியில் குடும்பத்தோடு சென்று வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்த புத்தகம் என் வாழ்க்கையின், என் பரம்பரையின் ஒரு பகுதி. அரசின் அரைவேக்காட்டுத்தன முடிவால் கள்ளுக்கடைகளை மூடி பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களில் ஒருவன் நான். நான் பிழைத்து வளர்ந்தது என் பெற்றோர் செய்த புண்ணியம். நான் மதியை மயக்கும் மது எந்த வகையில் இருந்தாலும் எதிர்ப்பவன். அது தேவாலயத்தில் கொடுக்கும் திராட்சை ரசமாக இருந்தாலும். அது புளித்தது என்பதால். என் கையருகில் உலகில் உள்ள அத்தனை மது வகைகளும் இருந்தாலும் அதன் சுவை அறியாதவன், நண்பர்கள் மத்தியில் அதிக அழுத்தம் எனக்கு இருந்தாலும் மதுவை சுவைக்காதவன். ஆனால் சிறு வயதில்

ஒற்றை மர புதிய கள்ளின் சுவை அறிந்தவன். பதனீரின் பக்குவம் தெரிந்தவன். கள் சேர்த்த ஆப்பத்தை சுவைத்தவன். கட்டை விரலால் நுங்கு சுளையை நோண்டி சுவைத்தவன். நுங்கு வண்டி ஓட்டியவன். ஓலை காற்றாடி செய்து விளையாடியவன். குருத்தோலை பவனி வருபவன். பனம் பழத்தை பிழிந்து குடித்தவன். விதையில் முளைத்த இனிய பூவை சுவைத்தவன். விதையை முளைக்க வைத்து கிழங்கை தின்றவன்.

அப்பா பனங்கையை கொண்டு வீடு கட்டியவர். ஓலை கூரை வேய்தவர். பனமட்டை அவுனியால் மரமேறும் தலை கயிறு, அரிவாள் பெட்டி செய்தவர். தாத்தா மரத்திலிருந்து தவறி விழுந்து அப்பாவின் ஐந்து வயதில் இந்த உலகை விட்டுச் சென்றவர்.

எங்கள் வீடு தஞ்சாவூரில் பனங்காடு என்ற கிராமத்தில் உள்ளது. எங்கள் வீட்டு பனைமரத்தில் அப்பாவால் முடிந்த வரை நுங்கு பறித்து எங்களுக்கு கொடுத்தார். சிறுவயதில் மரமேறிய எனக்கு இப்போது பழக்கம் மறந்தது. மரமேறி மரத்துப் போயிருந்த என் கை, கால், கணினி மென்பொருள் வேலையால் மென்மையானது. இப்போது நுங்கு பறிக்க ஆளில்லை. அதுவாக பழம் எப்போது விழும் என்ற காத்திருப்பு.

இந்த புத்தகம் ஒரு அழியா ஆவணம், ஒரு சிறு துளியிலிருந்து ஆட்சியர் மற்றும் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்தி பெருவெள்ளமாக மாறும். பனங்காட்டை அழித்து தார் சாலை போட்டாலும் அது முளைத்து இயேசுவை போல உயிர்த்தெழும். அப்போது பனங்காடுகள் செழுமை ஆகியிருக்கும். மண்ணில் நீர் மட்டம் உயர்ந்திருக்கும். பனை உணவுகள் மிகுந்திருக்கும். அதனால் கிராம பொருளாதாரம் உயர்ந்திருக்கும். நம் உடல் நலம் உயர்ந்திருக்கும். மனித உயிர் காக்க, மரமேற தானியங்கி எந்திரம் இருக்கும். அதை என் மகனே கண்டுபிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழரின் மேன்மை, கிராம பொருளாதாரம், அனைத்து மத ஆன்மீகம் என பலவற்றையும் அறிய நாம் படிக்க வேண்டிய புத்தகம் பனைமரச் சாலை.

சீீீீீனர்களின் பட்டுச் சாலை போல தமிழர்களின் பனைமரச் சாலை. எழுத்தாளர் ஜெயமோகனின் பனிமனிதன் புத்தகத்தை போல இது அற்புதமான பனை மனிதனின் புத்தகம்.

இறுதியாக ஏனோ வேள்பாரி நாவலில் வரும்

‘பனையன் மகனே பனையன் மகனே

பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே’

என துவங்கும் பாடலை இங்கு பாட தோன்றுகிறது.


நன்றி.

- அமெரிக்க பனை நிலத்திலிருந்து (தென் கரோலினா மாநிலம்) அமல்.


---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூடுகையில் 10 டிசம்பர் 2020 அன்று புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசியது.

--- பனைமரச் சாலை - இணையத்தில் இலவசமாக https://pastorgodson.wordpress.com/2016/05/ பனைமரச் சாலை – வாங்க https://www.commonfolks.in/books/d/panaimara-saalai உப்பு வேலி https://ta.wikipedia.org/s/4kum

பனிமனிதன் https://thanjainadodi.blogspot.com/2020/07/blog-post.html

பட்டுச் சாலை https://ta.wikipedia.org/s/n6t



No comments:

Post a Comment