செயல் வீரர்


அப்பாவின் அருமை ஒருவன் அப்பாவாகும் போதுதான் தெரியும். அதுவும் அவரை இழக்கும் போது அடைவது பெரும் துயரம். சிறுவயதில் கதாநாயகனாக இருப்பவர் பதின்பருவத்தில் வில்லனாக தெரிவார். காலச்சக்கரத்தில் அவரை பற்றிய எண்ணம் நமக்கு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அவரின் அன்பு மாறாதது, நமக்கு தெரியாதது. காலம் செல்லச் செல்ல அவரைப்பற்றி முழுவதும் புரிய தொடங்கும் போது நாம் அனேகமாக அவரை இழந்திருப்போம் அல்லது இழந்து கொண்டிருப்போம்


ஆஞான். என் அப்பா. நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் MLA வாகவும், பெரிய தொழில் அதிபர்கள் ஆகவும் இருந்தபோது, அவரின் ஐந்து வயதில் பள்ளி செல்லாமல் ஒரு பண்ணையில் விவசாய கூலியாக வேலை செய்தவர். அந்த வயதிலேயே அவரின் அப்பாவை இழந்தவர். படிப்பறிவு இல்லாமல் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியவர். அவரோடு சேர்த்து பலரையும் முன்னேற்றியவர். 


அவரின் அம்மாவின் மீது அதிகம் அன்பு கொண்ட அவர் தன் தம்பி தங்கையை திருமணம் செய்து கொடுத்தார்.


அவருக்கு திருமணம் ஆனதும் கடின உழைப்பால் அவர் செய்யாத வேலையில்லை. அரிசி ஆலையில் அவித்த நெல்லோடு சேர்ந்து அவரும் வெயிலில் காய்வதை பார்த்திருக்கிறேன். அரிசி மூட்டையை மிதிவண்டியில் ஏற்றி சென்று விற்றிருக்கிறார். இரண்டு ஆள் தென்னை மரங்கள் முப்பத்திரண்டையும் கள் எடுப்பதற்காக காலை மாலை இரு வேளையும் ஏறி தென்னங்கள் இறக்கியிருக்கிறார். 


அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் டக்டக் என்ற சத்தம் என் தூக்கத்தில் கேட்கும். ஆஞான் காயந்த முள்ளு முருங்கை மரத்தில் செய்த கட்டையில் இரண்டு கூலாங்கற்களை அடித்து அதிலிருந்து வரும் பொடியை தூவி, பாலை அருவாளை தீட்டிக்கொண்டு இருப்பார். ஆற்றுக்கு கிழக்கே உள்ள புதுப்பட்டிணம் தெருவில் இருக்கும், பச்சையம்மா வீட்டில் பால் வாங்கிவிட்டு, பக்கத்து கொல்லையில கள்ளு இறக்குவதற்காக தென்னை மரம் ஏறிக்கொண்டிருக்கும் ஆஞானிடம் காலையில 7 மணிக்கு போவேன். அப்போது கள்ளுக்கடைக்கு 2 ஆள் மரம் (32 மரம்) ஏறிக்கொண்டிருந்தார். நான் போகும்போது 16 மரம் முடித்திருப்பார். ஒரு மரத்தில் ஏறி கலயத்தில் உள்ள கள்ளை இடுப்பில் உள்ள காய்ந்த சுரைக்காயில் செய்த குடுவையில்(குடுக்கை) ஊற்றிக்கொண்டு கீழே வந்து அதை பன்னாடையால் வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றிக்கொடுப்பார். நோஞ்சானாக உடல் இளைத்து இருந்ததால் தினமும் ஒரு டம்ளர் கொடுப்பார். அதில் தும்பை பூபோல வெள்ளையா நுரை மிதக்கும். தனிமரத்து புதிய கள் பதனீர் போல இனிப்பு அதிகமாக இல்லாமல், புளிப்பும் இல்லாமல், சிறிது குறைவாக இனிப்பு இருக்கும்.

அமலு, திருப்பி புறங்கைய காமி,

இந்த நுரைய கையில் வைத்து பாரு.

என்னா தெரியுது.

ஒன்னும் இல்லையே.

நல்லா உத்துப்பாரு.

ஆஞான்ரொம்ப சின்ன சின்னதா பூச்சிங்க போவுது.

ஆமா, இந்த பூச்சிங்கதான் நம்ம உடம்புக்கு நல்லது. வயித்துக்கு செரிமானத்திற்கு நல்லது. வெயில் ஏற ஏற இந்த பூச்செல்லாம் குறைய ஆரம்பிக்கும். பானையில இருக்கிற கள் புளிக்க ஆரம்பிக்கும். இதனால போதை அதிகரிக்கும் என கள்ளை பற்றி பாடம் எடுத்திருக்கிறார்.

 

அப்பாவும் அம்மாவும் வளர்ந்த விதம் வேறாக இருந்தாலும் அவர்களின் மன ஒற்றுமையால் குடும்பம் வேகமாக வளர்ந்தது. அவர்களின் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளில் அம்மாவின் நகைகளை கொண்டு சொந்தமாக அரை ஏக்கருக்கு சிறிது குறைவாக நிலம் வாங்கினர். அவர் என் அம்மாவின் மீது அதிக அன்பு வைத்திருந்தார். அதன் அடையாளம்தான் நாங்கள் நான்கு ஆண்பிள்ளைகள். அம்மாவின் அன்பில் ஒரு தங்கை. 


என் பெரியப்பா இறந்த பிறகு,  வாங்கியிருந்த புதிய கொல்லையில் 10 அடிக்கு 30 அடி தென்னங்கீற்றில் கூரை வேய்ந்த வீட்டில்  நான்கு பிள்ளைகளுடன் 1980ல் குடி வந்தார்கள். அப்பொழுது நான் முதல் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். வந்தவுடன் கொல்லையை சுற்றி 60 தென்னை மரங்கள், 25 தேக்கு மரங்கள், சவுக்கு மரங்களும், மல்லிகை, வாழை, பலா, மா, எழுமிச்சை, நாரத்தை, கடாரங்காய், வேம்பு என பலவகையான மரங்களுடன் பெரிய தோப்பாகா வளர்ந்தது. நாங்களும் அவைகளோடு வளர்ந்தோம்.


அப்பா வெளியில் வேலை செய்துவிட்டு மாலை வந்தவுடன் கொல்லையில் உள்ள கேணியில் தண்ணீரை பெரிய வாளியின் மூலம் இறைத்து வாய்க்காலில் ஊற்றுவார். அம்மா வாழைக்கும் மற்ற மரங்களுக்கும் தண்ணீரை மண்வெட்டியால் பாய்ச்சுவார். பானையில் நீரை சுமந்து அம்மா மல்லிகை பூச்செடிகளுக்கு ஊற்றுவார். அப்போது அவர்களுடன் நிலா வெளிச்சத்தில் வேலை செய்தது இன்றும் நினைவிலிருக்கிறது.

 

அப்பாவுக்கு தினக்கூலி என்பதால் அவர் காய்ச்சலில் பத்து நாட்கள் படுத்தால் உண்பதற்கு உணவு கொல்லையிலிருந்து  வந்தாலும் செலவிற்கு பணமிருக்காது. அதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் நான் மூன்றாவது படிக்கும் போது வகுப்பு நண்பர்களிடம் பொன்வண்டு விற்று சம்பாதித்த  25 காசு அப்பாவுக்கு வெற்றிலை பாக்கு வாங்க உதவியது. அப்பாவுக்கு என் முதல் பண உதவி. 


சிறுவயதில் நான் துறுதுறுவென இருந்ததால் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் என்னை திருவையாறு அருகே உள்ள கடுவெளியில் தாத்தா வீட்டில் அப்பா என்னை விட்டு விட்டு வருவார். அம்மாச்சி சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து கொண்டு அவருக்கு பிடித்த பேரனாக இருப்பேன். அப்பா வேகமாக நடப்பவர். ஒருமுறை தாத்தா வீட்டிலிருந்து வரும் போது தஞ்சாவூர் இரயிலடியில் நான் காணாமல் போய் ஒரு பூவிற்கும் அம்மாவிடம் அழுதுகொண்டிருந்தேன். அப்பா பதறிப்போய் தேடி கண்டுபிடித்து அவரிடமிருந்து என்னை அழைத்துச் சென்றார்.

என்னடா, பனமட்டையிலிருக்கிற எங்கள் பிதாவே’, நல்லா தெளிவா சத்தமா சொல்லுடா, ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே’. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது புதுநன்மை எடுப்பதற்காக அப்பா எனக்கும் அண்ணனுக்கும் செபம் சொல்லிக்கொடுக்கும் போது எனக்கு சொல்லிய இந்த வார்த்தையிலிருந்து இன்றும் தினந்தோரும் செபம் சொல்லும் போது எனக்கு பரலோகம் என்றாலே என் வீட்டிலிருக்கும் மூன்று பனை மரத்தின் உச்சிதான் நினைவுக்கு வரும்.

நானும் அண்ணனும் புதுநன்மை வாங்கிய பிறகு தினமும் மாலையில் அப்பா எங்களை செபமாலை செய்ய வைப்பார். அண்ணன் பள்ளி சென்ற வரைசெய்தார். நான் தொடர்ந்து செய்து வந்தேன். பிலோமி சித்தி எனக்கு முழு செபமாலை செய்யும் முறையை சொல்லி கொடுத்தார். அதனை குறிப்பெடுத்துக்கொண்டு நான் ஊரில் இருந்த என் இருபத்தைந்து வயது வரை குடும்ப செபமாலை செய்தோம்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது 100 குழி நன்செய் வயல் வாங்கினார். அதில் விளைவித்த நெல், உளுந்து, பயறு, எள், துவரை போன்ற விவசாயத்தின்  மூலம் எனக்கு பல விவசாய வேலைகளை கற்றுக்கொடுத்திருக்கிறார். இளம் காலைபொழுதில் உளுந்து பறிக்கும் போது வியர்த்து கொட்டிய நினைவு மாறக்க முடியாதது.

நான் ஒன்பதாவது படிக்கும் போது ஓட்டு வீடு கட்டினார். மின்சாரம் தொலைக்காட்சி போன்றவை வீட்டிற்கு வந்தது.  


பத்தாவது தேர்வு பெற்ற பிறகு அப்பாவின் நண்பர் பன்னீர் என்பவர் எனக்கு பல சான்றிதழ்கள் வாங்க உதவி செய்தார். ஆசிரியர் பாலு அவர்களின் வழிகாட்டலில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தேன்.


அப்பா நன்செய் மற்றும் புன்செயில் பல ஏக்கர் நிலங்கள் இப்போது வைத்திருந்தார்.‌ இரண்டு ஜோடி வண்டிமாடும் பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகளும், ஆடு, கோழி என பெரிய பண்ணையை வைத்திருந்தார். நாற்று நடும் போதும் அறுவடையின் போதும் இருபதுக்கும் மேற்பட்ட வேலையாட்கள் வீட்டில் தங்கி வேலை செய்வார்கள். எல்லோருக்கும் அம்மா சமைப்பார். எனக்கு மளிகை காய்கறி பொருட்கள் வாங்கும் பொறுப்பு நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை இருந்தது. 


பள்ளி இறுதி வகுப்புகளில் படிக்கும் போது எனக்கு அப்பாவின் செயல்களும் எப்பொழுதும் அவரின் கோபமான முகமும் எனக்கு பிடிக்காது. இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லி புலம்புவேன். அப்போது அம்மாதான் எனக்கு அப்பாவை பற்றி புரியவைப்பார். அவர் சிறுவயதில் இழந்த மகிழ்ச்சிகளையும், அவருக்கு உழைப்பதே வாழ்க்கையாகிவிட்டதையும். அவற்றை எல்லாம் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்றும். 


பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி சென்று தனிப்பயிற்சியெல்லாம் முடித்து வீடு வந்து சேர எட்டு அல்லது ஒன்பது மணியாகும். அதற்கு பிறகு படிக்க ஆரம்பித்தால் படுக்க இரவு ஒரு மணிக்கு மேல் ஆகும். சில இரவுகளில், படித்தது போதும் படுப்பா என்று அப்பா சொல்லி விட்டு போவார். அவர் எப்போது தூங்குவார் என தெரியாது.

அப்பா வயலுக்கு போயிட்டு வரும்போது வயலிலிருந்து வல்லாரை கீரை பறித்து வந்து அம்மாவிடம் கொடுத்து துவையல் செய்து சாப்பிடுவோம். வீட்டுக்கு வரும் அப்பாவின் நண்பர்கள் மூலிகைகளைப்பற்றி பேசுவார்கள். வீட்டுக்கொல்லையில் வெண்டைக்காய் நிறைய காயக்கும். இதனால் அம்மாவின் சமையலில் அதிகம் வெண்டைக்காய் இருக்கும். உடம்புக்கும் மூளைக்கும் தேவையான உணவுகளை பார்த்துத்பார்த்து எங்களுக்கு கொடுத்தார்கள்.


பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் படிப்பு படிக்க நினைத்த எனக்கு கிடைக்காததால் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அப்பாவின் நண்பர் தண்டாயுதபாணி அவர்களின் ஆலோசனையில் இயற்பியல் பட்ட வகுப்பில் சேர்ந்தேன். பெரிய குடும்பத்திலிருந்து முதல் ஆளாக நான் கல்லூரிக்கு சென்றது அப்பாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  


கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என் நண்பன் ஆனந்தோடு சேர்ந்து வல்லம் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி மற்றும் தொலைக்காட்சி சரிபார்த்தல் படிப்பில் சேர அப்பாவிடம் விருப்பத்தை சொன்னேன். அப்போது வீட்டில் பணமில்லை. ஆனால் அப்பா உனக்கு என்ன படிக்கனுமோ படி நான் உதவுகிறேன் என்று முழுமையாக என்னை நம்பினார். அவரின் நம்பிக்கையை பார்த்து நெகிழ்ந்து போனேன். அப்படி படித்த தொழில்தான் பின்னாளில் எனக்கு வேலை பார்த்து கொண்டே படிக்க உதவியது.


அப்பாவின் நண்பர் வழிகாட்டுதலில் சென்னை ஐஐடியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக சேர முடியவில்லை. கல்லூரியை முடிக்காத என்னால் என்ன செய்யமுடியும் என்பது பெரிய ஏமாற்றமாக இருந்தது. காலையிலிருந்தே சோகத்தில் படுத்திருந்தேன். மாலையில் அம்மா என் அருகே வந்து உனக்கு திறமை இருக்கு, இப்படி சோகமா இருந்து அதை குறைத்து கொள்ளாதே என்றார். பொழக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு போய் வேலையை பாருடா என்றார் அப்பா. அந்த வார்த்தைகளில் இருந்த அர்த்தங்களை உணர்ந்தேன். எழுந்து நண்பன் ஆனந்தை பார்க்க சென்றேன். அவனும் நானும் ஒரு கணிப்பொறி பயிற்சி மையத்தில் சேர்த்தோம். என் வாழ்க்கையின் பாதையே மாறியது. ஆசிரியர்கள் அறிவுக்கண்ணை திறந்தால் பெற்றோரும் நண்பர்களும் நம்மை இந்த உலகை எப்படி பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை உணர்ந்தேன்.


முதுகலை கணினி பட்ட மேற்படிப்பு படிக்க சேர்ந்த போது எனக்கு TVS50 வண்டி வாங்கி தருவதாக அப்பா சொன்னார். ஒரு ஏக்கர் நிலத்தை விற்று வண்டி வாங்கலாம் அதற்கு பெட்ரோல் எப்படி தினமும் ஊற்ற முடியும் என வண்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதுவும் சரிதான் என்று சிரித்தார்.


ஐம்பது வயதில் ஒவ்வொரு ஆணுக்கும் வரும் பயம், பிள்ளைகளின் படிப்பு, திருமணம் மற்றும் அவரின் ஓய்வு கால செலவுகள். அதற்கான முயற்சியில் அவர்  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் புதிதாக செய்த தொழில்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. எனது தங்கை, அண்ணன் திருமணங்கள், என் முதுகலை பட்டம் படிப்பு என பல காரணங்களால் அவர் சேர்த்த சொத்துக்கள் குறைந்தது. மேலும் அப்பாவின் மீது அம்மாவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்து இருந்தது. 


அப்பாவின் நண்பர் தலைமை செயலகத்தில் இருந்தார்.  அவரின் வழிகாட்டலில் கல்லூரி முடியும் போது 1998 ல் சென்னையில் NIC ல் கணினி பயிற்சி செய்ய இடம் கிடைத்தது. 1999ல்  நான் வேலையில் சேர்ந்த பிறகு வீட்டின் கடன்கள் குறைந்து அப்பாவின் பளு குறைய ஆரம்பித்தது. 


என்னை போன்று படித்த பெண்ணை எனக்கு திருமணம் செய்ய அப்பா நினைத்தார். எனக்கு மட்டுமல்ல நம் குடும்பத்துக்கும் ஏற்ற பெண்ணை பார்க்க சொன்னேன். அவரும் சரி என்றார்.


அப்போது நல்ல வேலை தேடுவதில் மும்முரமாக இருந்தேன். கல்லூரியில் படிக்கும் போது அப்பாவின் நண்பர் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவர் சிங்கப்பூர் சென்று வந்த கதையையும் சிங்கப்பூரின் வளர்ச்சியை பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். அதனால் சிங்கப்பூர் எனக்கு ஒரு பெரிய கனவாக இருந்தது. சிங்கப்பூர் செல்ல முயன்றேன். எனக்கு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவும் வாய்ப்பு வந்தது. அமெரிக்காவை தேர்வு செய்தேன்.


நான் அமெரிக்கா வந்தவுடன் அப்பா இழந்த நிலங்களை எல்லாம் வாங்க முயன்றேன். முடியவில்லை. எனது ஓய்வு காலத்தில் நான் வந்து குடியிருக்க எனக்காக ஒரு பண்ணையை உருவாக்க ஆசைப்பட்டார். பெருங்கனவோடு ஆரம்பித்தோம். எதிர்பாராதவிதமாக முடியவில்லை.


2016ல் அப்பா அமெரிக்கா வந்தபோது அவருக்கு வயது 74. 13 வருட வாடகை வீட்டிலிருந்து நாங்கள் சொந்த வீட்டிற்கு அப்பாவின் ஆசியுடன் அப்போது குடிபுகுந்தோம். அடுத்த வீட்டை என் நண்பர் கட்டிக்கொண்டு இருந்தார். அதன் கட்டுமானங்களை தினமும் பார்ப்பார். மாலை நான் அலுவலகத்திலிருந்து வரும் போது வாசலில் இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்.  தினமும் மாலை வேளையில் ஒரு மணி நேரம் நடைபயிற்சிக்காக வீட்டின் அருகில் தெருக்களிலிலோ ஆற்றுக்கரையிலோ ஏரிக்கரையிலோ  பேசிக்கொண்டே செல்வோம். பல வருடம் கழித்து நீண்ட நாட்கள் அவரோடு இருந்தவைகள்  அந்நாட்கள்.

நான் சிறுவயதிலிருந்து கல்லூரி முடியும் 25 வயதுவரை வீட்டிலேயே சுவையான உணவு மூன்று வேலையும் (சில நாட்கள் தவிர) சாப்பிட்டவன். என் பள்ளிகளும் கல்லூரிகளும் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது ஒரு காரணம். பஞ்ச காலத்திலும் அம்மா ஏதாவது செய்து சுவையாக சமைத்துவிடுவார்கள்எட்டு பேரோடு பிறந்து எல்லோருக்கும் சமைத்து வளர்ந்ததால் அம்மா புதுபுது விதமாக சமைத்துக்கொண்டே இருப்பார்கள். அம்மா சமைக்கும் போதும் பலகாரம் சுடும் போதும் அவங்க அருகிலேயே இருந்து உதவுவேன். அதனால் நான் சிறுவயதிலிருந்து அதிகமாக சாப்பிட்டுகொண்டே இருப்பேன். அதற்கேற்ற உடல் உழைப்பும் எனக்கு இருக்கும்

அப்பா ஞாயிற்றுக்கிழமை சகாய மாதா கோவிலுக்கு போய்விட்டு வரும்போது ஆட்டுகறி வாங்கி வருவார் அன்றைய குழம்பிற்கு. திங்கள் கிழமை பருப்பு குழம்பு. செவ்வாய் கிழமை ரசம். புதன் கிழமை மீன் குழம்பு. வியாழக்கிழமை புளிக்குழம்பு. வெள்ளிக்கிழமை பொரித்த குழம்பு, பட்டாணி குழம்பு என் ஏதாவது ஒரு குழம்பு. சனிக்கிழமை விரதம். அன்று எல்லோருக்கும் நல்லெண்ணெய் தேய்த்து விட்டு குளிக்க செய்வார். அன்று மாலையில் பச்சை பயறு பாயசம் அல்லது பொரிமாவு என் ஏதாவது உணவு இருக்கும். பெரிய திட்டமெல்லாம் இல்லாமல் ஆனால் திட்டமிட்டு வாழ்ந்தார்கள்.

நான் அம்மாவுக்கு உதவி செய்துகொண்டு அம்மாவின் அருகிலேயே இருப்பேன். அதனால் மற்றவர்களை விட அம்மாவுக்கு என்னை அதிகம் பிடிக்கும். எனது பதின் பருவத்தில், குடும்பத்தில் வரும் சிறுசிறு சண்டைகளாலும், மற்றவைகளாலும் எனக்கு வரும் கோபங்களை எல்லாம் கட்டுப்படுத்தி எனக்கு அறிவுரைகளை சொல்லி என்னை முழு மனிதனாக வளர்த்தில் மற்றவர்களை விட அம்மாவின் பங்கு மிக பெரியது.

அம்மா எவரையும் எளிதாக நம்பமாட்டார். நக்கல், நகைச்சுவை மிகுந்தவர். ஆளைப்பார்த்து அவருக்கு தகுதி இருந்தால்தான் உதவி செய்வார். இதற்குமாறாக, அப்பா எவரையும் எளிதாக நம்புவார், அவர்கள் முன்னரே ஏமாற்றி இருந்தாலும் அவரை மன்னித்து அவருக்கு உதவிசெய்வார். நக்கல், நகைச்சுவை குறைந்தவர். இந்த வேறுபாட்டால் அடிக்கடி அவர்களுக்குள் சிறுசிறு சண்டை வரும். ஆனால் இருவரும் அதிகம் உழைப்பவர்கள், தேவை இல்லாத செலவு செய்யமாட்டார்கள். அம்மா வெளியில் உணவகத்தில் சாப்பிடமாட்டார். கடையில எட்டணாவுக்கு காபி குடிக்கிறதுக்கு பதிலாக காபித்தூள் வாங்கி வா பத்து நாளைக்கு காபி வச்சு குடிக்கலாம் என்பார் அம்மா. 

அம்மா, அப்பாவின் சேமிப்பும், சொத்து சேர்த்தலும் எங்கள் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு மாற்றியது. அம்மாவின் திருமணத்திற்கு போட்ட நகைகளை கொண்டு, திருமணமாகி இரு ஆண்டில் 1000 ரூபாய்க்கு 1973 ல் வாங்கிய அவர்களின் கொல்லை இன்று பல லட்ச ரூபாய். அவர்கள் வாங்கிய பல ஏக்கர் சொத்துகள் இன்று இருந்திருந்தால் பல கோடி மதிப்புள்ளது. அமெரிக்கா வந்த இருபது ஆண்டுகளாக முயற்சி செய்தும் என்னால் முடியாதது. 

அப்பா அம்மாவின் பெரிய பலவீனம் அவர்கள் பள்ளி செல்லாதது. அதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தனர். பள்ளிகூடம்  செல்லாத படிப்பறிவு இல்லாத அவர்கள் பிள்ளைகள் ஐந்து பேரையும், சொந்தங்களை எல்லாம் மீறி படிக்க வைத்து அடுத்த நிலைக்கு மாற்றிய அவர்களின் அனுபவம் அதிகம். பல வேற்றுமைகள் அவர்களுக்குள் இருந்தாலும் ஒற்றுமையாக எங்கள் குடும்பத்தை முன்னேற்றினார்கள். அதுதான் அவர்களின் வெற்றி.


இறுதி வரை மிதிவண்டியை தவிர வேறு எதையும் அப்பா ஓட்டியது இல்லை. 

 

யாருக்கும் கேடு நினைக்காத அவர் படுத்தவுடன் தூங்கி விடுவார். 


எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இறுதி வரை தினமும் மாலை வேளையில் குளித்துவிட்டு செபமாலை செய்வார்.


விவசாய சங்க தலைவராக சில ஆண்டுகள் இருந்தார். பல போராட்டங்களை நடத்தி விவசாய மக்களுக்கு உதவியுள்ளார்.


அவர் எளிதில் கோபப்படுவதால் உறவுகள் அனைவரும் அவருக்கு பயப்படுவர்கள். 


என் பெரிய குடும்பத்திலுள்ள அனைவரும் தேவைப்படும் அறிவுரைகளை அவரிடமிருந்து பெற்றார்கள்.


அவரின் இறுதி நாட்களில்  ஒரு வாரம் கால் வலியால் அவதிப்பட்டார். 


‘அமலு கால் வலிக்குது தவிடு வறுத்து ஒத்தடம் கொடுக்கிறியா?’

இரவு மூன்று மணிக்கு அப்பா வலியின் வேதனையோடு கேட்டார். அப்பொழுதுதான் இரண்டு மணிக்கு ஒத்தடம் கொடுத்து விட்டு கண்ணயர்ந்தேன். இறுதி நாட்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கேட்பார். அவருடைய அந்த குரல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.


அன்று காலையில் அவரின் வாய் கருத்திருந்தது. காபி கேட்டார். அவரின் வாயை சுத்தம் செய்துவிட்டு சிறிது ஊட்டிவிட்டேன். ஒரு வாய் குடித்தார். இட்டலியோ இடியாப்பமோ காலை உணவு வேண்டாமென்றார். வீட்டில் உள்ள எல்லோரிடமும் மெதுவாக பேசிக்கொண்டு இருந்தார். நேரம் செல்லச் செல்ல குரல் குறைந்து கொண்டிருந்தது. காலையிலிருந்தே தாத்தாவுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருக்கிறது என்று ஆலன்  சொல்லிக்கொண்டு இருந்தான். உடலில் சூடு குறைந்து கொண்டே வந்தது. உள்ளங்கை உள்ளங்காலை தேய்த்து விட்டு சூடேற்றினோம். பலனில்லை. பிற்பகல் மூன்று மணியளவில் எங்கள் கண்முன்னே எந்த வித பெரிய சிக்கலும் இல்லாமல் நீண்ட நாள் இருந்து அவதிபடாமல் அவர் எங்களிடமிருந்து விடைபெற்று சென்றார். 


அவரின் இறுதி நாட்களில் அவரோடு மூன்று வாரங்கள் மருத்துவமனையிலும் வீட்டிலும் இருந்து அப்பாவை கவனித்து கொண்டு அவரோடு இருந்தது, என்னை போன்று வெளிநாட்டில் இருப்போருக்கு கிடைக்காத வாய்ப்பு, கடவுள் எனக்கும் என் குடும்பத்திற்கும் கொடுத்த ஆசி. என் மகன்களுக்கு கடவுள் கொடுத்த அனுபவ பாடம். 


அப்பா அம்மாவிடமிருந்து  நான் கற்ற சில பாடங்கள் குறள் வடிவில் (எனது புதுக்குறள்  என்ற புத்தகத்திலிருந்து)


  1. தமக்கு கீழானவர்களின் உணர்வையும் தேவையையும்

அறிந்து உதவுபவர்கள் கடவுள்


  1. அறிவு ஆற்றல் உலகை காட்டி

மேதையாக மாற்றுபவர் அப்பா


  1. பெற்றோர்கள் ஆசிரியர்கள் நண்பர்கள் மனைவி/கணவன்

நம் வாழ்வின் படிகள்


  1. வாழ்க்கையென்பது சிரிப்புக்கு பின்னால் சோகமும்

கோபத்திற்கு பின்னால் அன்பும்தான்


  1. அமர்ந்தே இருப்பதால் மலச்சிக்கல் உண்டாகி

நீரிழிவு கொழுப்பு புற்றுநோயுண்டாகும்


  1. உடலுழைப்பு இல்லாமல் உண்பது நாம்

உடலுக்கு செய்யும் தீமை


  1. உணவு உழைப்பு உண்மை உறக்கம்

உடலுக்கு நன்மை தரும்


  1. உணவை நிறுத்தி உடலை உருக்கி

உயிரை நீக்கும் வயிற்றுப்புற்று


  1. தினந்தோறும் தலைக்குளித்து சனிதோறும் எண்ணெய்க்குளித்தால்

உடலில் சூடு சமநிலையாகும்


  1. நம்மால் நமக்கு செய்துகொள்ளும் வேலைகளை

நூறுபேராலும் செய்ய முடியாது


  1. வெற்றிலை தாம்பூலம் காரத்தை அதிகரித்து

உண்டபின் அமிலகாரத்தை சமநிலையாக்கும்


  1. நமக்கான நேரத்தை பயன்படுத்தியதன் அளவே

நமது இன்றைய நிலை


  1. சிலர் மீண்டும் ஏமாற்றுவது தெரிந்தும்

அவருக்கு கொடுப்பவர் கொடுத்துக்கொண்டிருப்பார்


  1. படித்தவன் பாட்டையும் ஏட்டையும் கெடுத்தான்

அவனின் அனுபவறிவே பெரியது


  1. அன்பு பண்பு பாலை ஊட்டி

மனிதனாக மாற்றுபவர் அம்மா


  1. எல்லோரிடமும் உள்ள நிறைகளை கவனித்தாலே

  நாம் நிறைவாக வாழலாம்


  1. ஒருவரிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும்

ஒரு நிறைக்காக பழகலாம்


  1. அமுதேயானாலும் கழுத்துக்கு கீழே கழிவாவதால்

பல்லுயிர் வாழ பகுத்துண்


  1. உணவகத்தில் நல்லுள்ளமில்லாமல் சமைப்பதால் அங்கு

உண்பவரின் உடலில் நோயுண்டாகும்


  1. எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்

உண்பதை குறைத்தால் உடல்நலமாகும்

  1. சொத்துக்களுக்கும் சுமைகளுக்கும் வேற்றுமை தெரியாமல்

பணசுமையால் மனச்சுமை கொள்ளாதே


  1. கண்ணிமைக்கும் நேரத்தில் வரும் கோபத்தால்

காலமெல்லாம் துன்பம் கொள்ளாதே


  1. கோபம் தீயாக பரவும் அதனை

பொறுமையெனும் நீரால் தணிக்கலாம்


  1. மிதித்து ஏறிச்சென்று அடுத்த படியை

மட்டுமே பார்ப்பவன்தான் மலையுச்சியையடைகிறான்


  1. சல்லடையாக இல்லாமல் முறமாக இருந்தால்

நல்லவைகளால் வாழ்வு சிறக்கும்


  1. செலவு செய்யாத செல்வங்கள் நமக்கு 

சொத்துக்களாகி நம்மை செல்வந்தனாக்கும்


  1. பிறருக்கு செலவு செய்த செல்வங்களால்

நம் குடும்பத்திற்கு புண்ணியமாகும்


  1. வரப்பை அழித்தால் வறட்சியால் விளையாமல்

வறுமையாவர் மக்களும் அரசும்


  1. பெற்றோரையும் தன்னையும் பிள்ளையையும் பணியையும் 

நாற்பதுகளில் கவனிக்க வேண்டும் 


அப்பாவுக்கு தேவையான செல்வத்தை அவர் செயலால் ஈட்டினார். அதனை கொண்டு சில நேரங்களில் ஏமாந்தாலும் பல பேருக்கு நல்லதையே செய்தார்.  செல்வத்தால் அடையாததை செயலால் அடையலாம் என்று அவரின் அனுபவத்தால் எனக்கு சொல்லிக்கொடுத்தார். செயல்கள்தானே கர்மயோகம். செயல்களை செய்பவர்தானே கர்மயோகி.


அப்பாவிற்கு அவரின் அப்பாவிடமிருந்து கற்றுக்கொள்ள கடவுள் வாய்ப்பளிக்கவில்லை. எனக்கு அளித்ததற்காக கடவுளை வணங்குகிறேன். இதனையே என் குழந்தைகளுக்கு வழங்குகிறேன். இதுதானே மனித வாழ்க்கை.


–அப்பாவின் நினைவுகளோடு அமல்