செயல் வீரர் - கடுவெளி தாத்தா


 

கடுவெளி ஆரோக்கியசாமி, என் அம்மா வழி தாத்தா. நான் சிறுவனாக இருந்தபோது அவர் மரக்கட்டில்லில் படுத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பதுதான் எனக்கு எப்போதும் நினைவு வரும். அவரின் மரப்பலகை கட்டிலின் அருகே மூன்று வயதான என் உயரத்திற்கு மேல் தரையிலிருந்து அவர் படித்த புத்தகங்கள்  மற்றும் ஆனந்த விகடன் குமுதம் மேலும் சிலவும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவரின் படுக்கையை சுற்றி வந்துகொண்டிருக்கும் என்னை கூப்பிட்டு இந்தா இந்த படத்திலிருக்கும் ஆறு வித்தியாசங்கள கண்டுபிடி என்று ஒரு குமுதம் புத்தகத்தை கொடுத்தார். இந்த விளையாட்டு எனக்கு பிடித்ததால் அங்கே இருந்த ஒவ்வொரு புத்தகமாக பார்க்க ஆரம்பித்தேன். அப்படி படிக்க ஆரம்பித்து படக்கதை, சிறுகதை என்று வளர்ந்து மேல்நிலைப்பள்ளி  படிப்பு முடியும் போது பொன்னியின் செல்வன் போன்ற பெரும் நாவல்களை நான்கு முடித்திருந்தேன். எனக்கு புத்தகத்தின் மீது ஆர்வத்தை தூண்டியதில் பெரும் பங்கு தாத்தாவினுடையது. அதை மேலும் வளர்த்தவர் என் அண்ணன்.

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து எண் 5 அல்லது 13 அல்லது 23 என  ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி கரந்தட்டாங்குடி தாண்டும் போது எனக்கு தூங்க கண்ணை கட்டும். இருபக்கமும் வரும் பசுமையான நெல் வயல்கள் பார்க்க ஆசையிருந்தாலும் அடிக்கும் குளிர்ந்த காற்றில் தூங்க ஆரம்பித்திருப்பேன். திருவையாறு பேருந்து நிலையம் வந்தவுடன் முழிப்பு வரும். இருபுறமும் வளர்ந்திருக்கும் வாழை தென்னை பாக்கு வெற்றிலை அது ஏறியிருக்கு அகத்தி மரம் என கண் குளிர பார்த்து கொண்டிருப்பேன். கூத்தாடி மதகு தாண்டிணால் எழுந்து தயாராக வேண்டும். இல்லை என்றால் பேருந்து கடுவெளி நிறுத்தத்தில் நில்லாமல் பனையூர் நிறுத்தத்திற்கு சென்றுவிடும். இறங்கினால் தெற்கே கால் கிலோமீட்டர் தொலைவில் காவிரி ஆறு. தண்ணீர் நிறைய ஓடினால் பேருந்து நிறுத்தம் வரை தண்ணீர் இருக்கும். வடக்கில் சென்றால் கடுவெளி கிராமம். அங்கிருந்து தாத்தா வீடு தொலைவில் சிறிது தெரியும்.  நெல் அரவை ஆலை பிள்ளையார் கோவில் சிவன் கோவில் நந்தி மற்றும் நெற்களத்தை தாண்டி தாத்தா வீடு செல்வதற்குள் விருந்தினர் வரும் செய்தி மிதிவண்டியில் செல்வோர் சொல்லி சென்றிருப்பார்கள். 

நான் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது அண்ணனுக்கு நன்றாக இருந்த கால்கள் திடீரென பிரச்சினையாக மாறியது. தாத்தா அம்மாவிடம் திருக்காட்டுப்பள்ளி பூண்டிமாதாவுக்கு வேண்டிக்கொண்டு மாதாவின் பெயரை பிறக்கும் பிள்ளைக்கு வை என்றார். அண்ணனுக்கும் சரியாகியது. நான் ஆணாக பிறந்ததால் அமலோற்பவநாதன் என்று பெயர் வைத்தார்கள். எனக்கு இன்றும் எங்கும் கிடைக்காத அமைதி அந்த ஆலயத்தில் தான் கிடைக்கிறது.


குளிர்காலம் முடிந்து பொங்கலை தின்று கரும்பை கடித்தால் வசந்த காலம் வந்துவிடும். எங்கள் வீட்டு தோட்டத்தில் அப்போது தவிட்டு குருவிகளும் மைனாவும் வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் பழுப்பு கரும் புள்ளிகளுடன் முட்டையிட ஆரம்பித்து இருக்கும். குறைந்தது பத்து பச்சை அல்லது சாரை பாம்பு குட்டிகளாவது நெளிந்து செல்வதை தினமும் பார்ப்பேன். இங்கு கடுவெளியை சுற்றி வயல்வெளிகள். காவிரியும் கொள்ளிடமும் பிரிந்து செல்லும் இடத்தின் நடுவில் எப்போதும் பசுமையாக இருக்கும் ஊர் கடுவெளி. பொங்கலுக்கு வாழைத்தார்கள் வெட்டப்பட்டு வயல்களை சுத்தம் செய்வார்கள். சம்பா பருவத்தின் நெல் அறுவடை முடிந்து மூன்றாம் போகத்திற்காக வயல்கள் தயாராகி கொண்டிருக்கும். அம்மாவின் அக்கா மற்றும் இரு தங்கைகளுக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் இருந்தது. நான்கு தம்பிகள் திருமணத்திற்கு தயாராகி கள் இறக்குதல் பசும் பால் கறந்து விற்றல் லாரிஓட்டுனர் என பல வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். 


தாத்தா காலையில் இராகு காலம் எமகண்டம் இல்லாமல் நேரம் பார்த்து நல்ல நேரத்தில் திருவையாறு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வருவார். வந்தவுடன் காலை உணவு முடித்து விட்டு அவர் வைத்திருந்த பட்டரை வண்டியின் ரேஸ் மாடுகளை காவிரியில் குளிப்பாட்டுவதற்கு ஓட்டி செல்வார். இந்தா இந்த வைக்கோலை எடுத்து வா என்று என்னிடம் சிறிய உருண்டையை கொடுப்பார். தாத்தா நான் மாட்ட ஓட்டி வரவா என்று கேட்டு நான் ஓட்டி வருவேன். காவிரி ஆற்றின் வேகமாக செல்லும் நீரில் மாடுகளை ஒரு மணி நேரம் பயிற்சிக்காக எதிர் நீச்சல் விடுவார். வீட்டிற்கு வந்து படுத்துக்கொண்டே படிப்பார். நானும் அவரோடு புத்தகங்களை புரட்டிக் கொண்டு இருப்பேன்.  அப்படி பழகிய பழக்கம்தான் இப்போதும் படுத்து கொண்டு படிப்பது பிடித்தாக உள்ளது. மாமாக்களும் மதிய உணவுக்கு வந்து சாப்பிட்டவுடன் சிறிது தூக்கம். காது கேளாத தாத்தாவை எப்படி எழுப்ப வேண்டும் என்று எனக்கு தெரியும். கூப்பிட்டால் எழமாட்டார். தலையணையில் மெதுவாக தட்டவேண்டும். தட்டும் அளவுகள் சிறிது மாறினாலும் திடுக்கிட்டு எழுந்து திட்டுவார். நான்கு மணிக்கே காபி குடித்து விட்டு மாமாக்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். தாத்தா இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு மாடுகளை பிடித்துக்கொண்டு ஓடுவார். ஒருமணி நேரத்தில் ஓட்டப் பயிற்சிக்காக கூத்தாடி மதகை தாண்டி சென்று விட்டு வருவார். ரேக்ளா மாட்டுவண்டி போட்டியில் தங்கம் வென்று வருவார். சில நேரங்களில் நானும் அவருடன் வண்டி பயிற்சிக்கா செல்வேன். ஊசியுள்ள தார்க்குச்சி வைத்து வண்டி ஓட்டி காவலர்கள் பிடித்தால் அபராதம் போடுவார்கள். அதனால் அதிலிருந்து தப்பிக்க தார் குச்சியின் நுனியில் திருகுடன் ஊசி வைத்திருப்பார்.


எனக்கு மூன்று வயதிருக்கும். அம்மாவும் நானும் தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தோம். மதியம் எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டார்கள். நானும் படுத்திருந்தேன் தூக்கம் வரவில்லை. எழுந்து கொல்லைப்புற தாத்தாவின் கொட்டகைக்கு சென்றேன். வரும் வழியில் பின்வாசலருகே என் உயரத்தில் இருந்த கூரையில் கட்டியிருந்த மூங்கிலின் நுனி துளையின் உள்ளே சிவப்பாக இருந்தது. விரலைவிட்டு எடுத்தேன். பேருந்து பயண சீட்டு. உள்ளே பார்த்தேன் இன்னும் இருந்தது. எல்லாவற்றையும் எடுத்து சரிசெய்து நடத்துநர் போல கையில் வைத்துக்கொண்டேன். அம்மாச்சியிடம் சென்று அம்மாச்சி டிக்கெட் வேணுமா என்றேன். வேண்டாம் என்று தூக்கத்தில் முனகினார். அம்மாவிடம் சென்று அம்மா டிக்கெட் வேணுமா என்றேன்.  தூக்கம் வரவில்லை என்றால் போய் கொல்லையில விளையாடுரா என்றார்கள். நானும் கொல்லைக்கு சென்று மாடுகளுக்கு ஒவ்வொரு டிக்கெட். பிறகு அணிலுக்கு காக்காவுக்கு மைனாவுக்கு என்று எல்லோருக்கும் கொடுத்து விளையாடி கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் அம்மாச்சி எழுந்து வந்து வீட்டின் பின்புறத்தில் கிடந்த இருபது ரூபாயை எடுத்து பார்த்தார். மூங்கிலை பார்த்தார். அவர் வைத்திருந்த சிறுவாட்டு பணத்தை காணவில்லை. தேடி பார்த்தார். மாட்டிடம் இரண்டு தாள் இருந்தது. நான் டிக்கெட் கேட்டது நினைவு வந்து ஐயோ என்று கத்தினார். அம்மா மாமா தாத்தா எல்லோரும் கொல்லையில் தேடினார்கள். என்னிடம் கேட்டார்கள். எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டேன் என்றேன். அடித்த மேலைக் காற்றில் எல்லாம் பறந்து சென்று விட்டன. பக்கத்து கொல்லைகளிலும் தேடினார்கள். நாலைந்து தாள்கள் கிடைத்தன. இருநூறு முன்னூறு ரூபாய் காணவில்லை என்று அம்மாச்சி புலம்பினார். ஒரு பவுன்ல நகையாவது வாங்கி போட்டிருக்கலாம். அவர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். 


நான் சிறுவயதில் துருதுருவென இருந்ததால் என்னை அடிக்கடி தாத்தா வீட்டில் விட்டுவிடுவார்கள். பாஸ்கர் மாமா என்னை அழைத்துக்கொண்டு கொல்லையில் தண்ணீர் அடி பம்பை கடந்து சீத்தாப்பழம் மரங்களை கடந்து சென்றாலே எனக்கு தெரிந்து விடும், என்னை விட்டு விட்டு கிளம்பிவிட்டார்கள் என்று. நான் கொஞ்சம் நேரம் அழுவேன். ஒன்றும் பயனிருக்காது.


பெரியம்மா மற்றும் பெரிய சித்தியை பற்றிய சிறுவயது நினைவுகள் எனக்கு இப்போது இல்லை. ஆனால் சின்ன சித்தி எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். அடிக்கடி ஏதாவது பலகாரம் செய்து அல்லது இலந்தை பழம் எடுத்து வருவார். எங்கள் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்துக்கோ அல்லது அவரின் வீட்டுக்கோ அவரை மிதிவண்டியில் அழைத்து செல்வது நான்தான். அவரின் மகன் ஸ்டான்லி என்னை விட ஒரு வகுப்பு கீழே ஒரே பள்ளியில் ஆறாவது முதல் படித்தான்.  சித்தி என்னை அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சொல்வார். 


பெரிய மாமா சாமிநாதன் எங்கள் வீட்டிலிருந்து அப்பாவோடு சில காலம் வேலை பார்த்தார். பிறகு பாண்டிச்சேரிக்கு சென்று வேலை பார்த்தார். அவர் வீட்டிற்கு வரும்போது கீழத்தெரு, மேலத்தெரு, பனையூர், பிள்ளையார் கோவில் தெரு என எல்லா இடங்களுக்கும் சென்று அவரின் நண்பர்களை பார்த்து வருவார். பிறகு தாத்தாவோடு காரசாரமாக பேசிக்கொண்டு இருப்பார்.


பரிசுத்தம் மாமா பால் கறந்து திருவையாறு மற்றும் நடுக்கடை சுற்றிய பகுதியில் உள்ள வீடுகளில் விற்பனை செய்து கொண்டிருந்தார். சில சமயங்களில் அவருடன் என்னையும் கூட்டி செல்வார். ஒலிபெருக்கி மற்றும் ஒலி தட்டுகள் வாடகைக்கு விடுவார். அவைகளை திண்ணையில் அடுக்கி வைத்திருப்பார். ஒரு ஒலித்தகட்டை எடுத்து மாமா இதுல எப்படி பாட்டெல்லாம் எழுதுறாங்க என்று கேட்டேன். கம்பிய விளக்குல சுடவச்சி இதுல எழுதுவாங்க. உன் கையில் அது மாதிரி எழுதவா என்று கேட்டவுடன் ஓடி ஒளிந்தேன். எனக்கு பிடித்த ஊதா நிறத்தில் பட்டுபோன்ற பளபளக்கும் சட்டை ஒன்றை ஒரு விடுமுறையில் எனக்கு எடுத்துக் கொடுத்தார். அதை நீண்ட நாட்கள் அணிந்து கொண்டு இருந்தது நினைவிருக்கிறது.


சகாயம் மாமாவுக்கு என்மீது பாசம் அதிகம். சில நேரங்களில் அது அதிகமாகி என்னை அடி தண்ணீர் பம்பின் கீழே உட்காரவைத்து தண்ணீரை அடித்து விடுவார். பம்பிலிருந்து வரும் நிறைய நீரில் எனக்கு மூச்சு விட முடியாது. தலையை அசைத்தால் தலையில் பலமான கொட்டு விழும். ஐந்து நிமிடம் கழித்து துண்டால் துவட்டி விட்டு திண்ணையில் உள்ள கால்கள் ஆடும் பழைய நாற்காலியில் உறித்த கோழி போன்ற என்னை நிற்க வைத்தார்.  பயத்திலும் குளிரிலும் ஆடும் நாற்காலியில் நின்ற நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். சின்ன மாமா பாஸ்கர் வந்து ஒரு திருமண அழைப்பிதழை கொடுத்து என்னை படிக்க சொன்னார். தஞ்சாலூர் திருவையாறு பங்கை சேர்ந்த என்று படிக்க ஆரம்பித்தேன். என்னடா கம்னேட்டி தஞ்சாலூர். தஞ்சாவூருனு சொல்லுடா என்றார் சகாயம் மாமா. தஞ்சாலூரு. பயத்தில் நாக்கு வேலை செய்யவில்லை. இறுதிவரை தஞ்சாவூர் என்று சொல்ல வரவே இல்லை. 


ஒருமுறை நெற்களத்தின் அருகே நண்பர்களுடன் விளையாடும் போது யாரோ எறிந்த ஒரு சிறிய கல் வந்து தலையில் விழுந்தது. தலையிலிருந்து இரத்தம் ஒழுகியது. சகாயம் மாமா பதற்றத்தோடு திருவையாற்றில் உள்ள நாட்டு மருத்துவரிடம் சென்று தலையில் கட்டு போட்டு வந்தோம். 


ஒரு நாள் மாலையில் வானம் இருட்டியது. சிறிது மழை தூர ஆரம்பித்தது. அம்மாச்சியும் நானும் நெற்களத்தில் காய்ந்து கொண்டிருந்த நெல்லை அள்ளிக் கொண்டு வந்து வீட்டில் அவசரமாக கொட்டிக்கொண்டு இருந்தோம். வாசல் படியில் தடுமாறி நிலைப்படி அருகே இருந்த படியில் நெல்லோடு விழுந்தேன். வாயின் கீழ் தாவங்கொட்டை படியின் நுனியால் அடிபட்டு இரத்தம் கொட்டியது. அம்மாச்சி ஒரு வித கரியை எண்ணெயில் கலந்து பூசினார். சகாயம் மாமா திருவையாறு நாட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று கட்டுப்போட்டார். 


நான் ரீத்தா சித்தியின் மகன்கள் சேவியர் மற்றும் தாஸ், சின்ன சித்தியின் மகன் ஸ்டான்லி எல்லோரும் தாத்தா வீட்டு திண்ணையில் பள்ளி விடுமுறையில் படுத்திருப்போம். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை ஐந்து மணிக்கு தினமும் ஒருவர் சங்கு ஊதிக் கொண்டு செல்வார். சேவியர் பயந்து நடுங்கி எங்களை பிடித்து கொள்வான். விடிந்ததும் எங்களிடம் பேய் சங்கு ஊதி சென்ற கதையை சேவியர் சொல்வான்.  திருவையாறை சுற்றியுள்ள ஏழு கோவில்களில் திருவிழா நடைபெறும். சாமி ஊர்வலம் கடுவெளி வரும் போது தாத்தா வீட்டின் எதிர் உள்ள நெற்களத்தில்தான் பல வேடிக்கைகள் செய்வார்கள், வெடிகள் வெடிப்பார்கள். பாண்டிச்சேரியிலிருந்து வரும்போது விலையுயர்ந்த உடைகளும் காலனிகளும் அணிந்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருக்கும் சேவியரும் தாஸும் மறுநாள் என்னோடு தெருவில் புழுதியில் விளையாடுவார்கள்.  விடுமுறையில் எல்லோரும் பெரியம்மா சித்திகள் வீட்டிலிருந்து வந்து விடுவதால் நேரம் போவதே தெரியாமல் விளையாடுவோம். திருவிழா விடுமுறை என்றால் வீடே பெரிய கூட்டமாக இருக்கும். விடுமுறை முடிந்து எல்லோரும் சென்ற பின்னர் வீடு வெறுமையாகிவிடும். தாத்தாவும் மாமாக்களும் வேலைக்கு சென்றவுடன் நானும் அம்மாச்சியும்தான் இருப்போம்.


அம்மாச்சி எப்போதும் ஒருவித கோபமான முகத்தோடுதான் இருப்பார். அவர் சொல்லும் வேலைகளையெல்லாம் செய்வதால் அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும்.  சில மளிகை பொருட்கள் வாங்க நான்தான் மேலத்தெரு செங்மலதாயி கடைக்கும், கோவில் அருகே இருந்த வழுக்கை(வழுக்கட்டி) தாத்தா கடைக்கும் போவேன்.

செங்கமலபாட்டிக்கு வாயில காசை வைத்திருந்தால் பிடிக்காது. அதனால் என்னை தவிர மற்ற சிறுவர்கள் சென்றால் மளிகை பொருட்கள் கொடுக்க மாட்டார். 


அம்மாச்சியின் முருங்கை காய், ஒட்டு மாங்காய், பலாக்கொட்டை சாம்பார் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரிய தாத்தா வீட்டுக்கு போனால் அங்கு பெரிய தாத்தாவோட பெரிய கொல்லைகளுக்கும் வயல்களுக்கும் நித்தியானந்தம் மாமா அழைத்து செல்வார். கொள்ளிட கரையில் உள்ள செழிப்பான வயல்வெளிகள். ஒருமுறை ஒரு பெரிய தேங்காய் அளவுள்ள மாங்காய் ஒன்று மாமா கொடுத்தார். அவரின் தாத்தா வைத்த பெரிய மாமரத்தில் இருந்து அதை பறித்தோம். வீட்டிற்கு வந்து வெட்டி சாப்பிட்டால் புளிப்பாக இருந்தது.


அம்மாச்சியிடம் சில ஆடுகள் இருந்தது. அதை நான்தான் மேய்ப்பேன். சிவன் கோவிலின் வாசலில் நுழைந்து சென்றால் வரும் நந்தவனத்தில்தான் ஆடுகள் மேயும். புதர்களும் கொடிகளும் மண்டிய இடம். ஒற்றை அடி பாதை வழியாக அடுத்து உள்ளே சென்றால் சாமி இருக்கும். மாலையில் பொழுது சென்றவுடன் நந்தவனத்திற்கு சென்று ஓட்டி வர வேண்டும். கோவிலை சுற்றி பெரிய மதில்சுவரின் மேல் காவல் தெய்வ சிலைகள் இருக்கும். அவைகள் இறங்கி வந்து நம்மை தின்றுவிடுமோ என்று பயந்து பயந்து செல்வோம் என்ற அம்மாவின் சிறுவயது கதைகள் நினைவு வரும். 


தாத்தா பாக்கை ஊறவைத்து அதனை சீவலாக வெட்டி திருவையாற்றில் கடைகளில் விற்றுக் கொண்டிருந்தார. வீட்டிலேயே மிதிவண்டி வாடகை கடை வைத்திருந்தார். அதனை சுத்தம் செய்வது, எண்ணெய் போடுவது, பஞ்சர் போடுவது என அனைத்து வேலைகளையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பிறகு சகாயம் மாமா அந்த கடையை வைத்திருந்தார். 


சகாயம் மாமாவும் பாஸ்கர் மாமாவும் கேசவன் மாமாவும் திருவையாறு கடைத் தெருவுக்கு சென்றால் என்னையும் மிதிவண்டியில் அழைத்து செல்வார்கள். போகும் போது 70, 80 களின் திரைப்பட பாடல்கள் ஆங்காங்கே கேட்டு கொண்டே செல்வோம். “அந்தி வரும் நேரம்…” பாட்டை மாலையில் மிதிவண்டியில் கடுவெளி திருவையாறு சாலையில் சென்று கொண்டே கேட்டது இன்றும் மறக்க முடியாதது. நான் திரையரங்கில் பார்த்த முதல் படம் கீதாஞ்சலி. பாஸ்கர் மாமாவும் நானும் 50 காசு தரை டிக்கெட் மணலில் உட்கார்ந்து பார்த்த அந்த படத்தின் பாடல்கள் “துள்ளி எழுந்தது பாட்டு”, “ஒரு ஜீவன்” இன்றும் எனக்கு பிடித்த பழைய நினைவுகளை தரும் முதன்மை பாடல்கள்.


பாஸ்கர் மாமா எருமை மாடு வளர்த்து பால் கறந்து விற்று வந்தார்.‌ அதிக அளவு பால் கறந்து சிறப்பாக தொழில் செய்ததால் திருச்சி வானொலி நிலையத்தால் தேர்வு செய்யப்பட்டு வானொலியில் அவர் பேட்டி வந்தது. இலைக்காக வளர்க்கப்படும் வாழை மரங்கள் பொங்கலுக்கு பின் கைவிடப்படும். அவற்றில் சில மரங்களில் காய்களும் பழங்களும் இருக்கும். பாஸ்கர் மாமாவோடு மாடு மேய்க்கும் போது காய் உள்ள தாரைபறித்து வாய்க்காலில் போட்டு வாழை சருகுகளால் மூடிவிட்டு வருவோம். மறுநாள் வாழைக்காய்கள் உண்பதற்காக பழுத்திருக்கும். 


நானும் பாஸ்கர் மாமாவும் அவர்களில் நண்பர்களும் இரவானால் நெற்களத்தில் நீரை ஊற்றி குளிர்வித்து அதன் மீது பாய் போட்டு படுப்போம். இரவில் கதை பேசி கொண்டு வானத்தில் நட்சத்திரங்களை பார்த்து கொண்டே இருந்தால் எப்போதும் தூங்கினோம் என்று தெரியாது. சில நேரங்களில் எரி நட்சத்திரங்கள் விழுவதை பார்ப்போம். 


நான் நான்காவது படிக்கும் போது பெரிய மாமாவின் முதல் குழந்தை பிறந்தது. தொட்டிலில் ஒரு சாவி கொடுத்தால் சுற்றும் பூங்கொத்து ஓடாமல் இருந்தது. அதன் பல் சக்கரங்கள் ஒரிடத்தில் தேய்திருந்தது. அதனை சிறிது சரிசெய்து நூலை வைத்து கட்டினேன். பூங்கொத்து ஓட ஆரம்பித்தது.

தாத்தா சிறுவயதில் நன்றாக படிப்பவர். அவர் அமெரிக்கா சென்று படிப்பதற்கு ஆசைப்பட்டார். அதற்கு அவர் குடும்பம் ஒத்துழைக்கவில்லை. குடும்பத்தில் சொத்து பிரச்சினைகள். அவரின் அப்பாவையும் எதிர்பாராமல் அதில் இழந்தார். அது நாய் நக்கிய வெல்லம் என்று சொத்துக்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டு குடும்பத்திலிருந்து வெளிவந்து அவர் வாங்கி இருந்த சிறிய கொல்லையில் குடியேறினார். பெரும் முயற்சி செய்து எட்டு பிள்ளைகளை வளர்த்து திருமணம் செய்து வைத்ததோடு சரி, பிரச்சினைகள் வரும் என்று சொத்து என்று பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை.


என் அப்பாவின் குணமும் நேர்மையும் தாத்தாவிற்கு தெரியும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை பார்த்துவிட்டு செல்வார். அவருடைய குடும்பத்தில் அப்பாதான் தாத்தா குடியிருந்த நிலத்தை பாகம் பிரிக்க மாமாக்களுக்கு கொடுக்க உதவினார். ஆனாலும் பின்நாட்களில் எட்டு பேர்களும் எப்போதும் மூன்று நான்கு பிரிவாக பிரிந்து சண்டையிட்டு சில நாட்கள் பேசிக்கொள்ளமாட்டார்கள்.


நான் ஒன்பதாவது படிக்கும் போது நீண்ட நாளாக கண்பார்வை இல்லாமல் இருந்த அம்மாச்சிக்கு கண் அறுவை சிகிச்சை என் பள்ளியின் அருகே இருந்த மருத்துவ மனையில் நடந்தது. ஒரு வாரம் அங்கிருந்தார். நான் உணவு கொண்டு செல்வேன்.‌ மாலை வேளையில் அவரை பார்த்துக் கொள்வேன். ஆனால் கண் பார்வை கிடைக்கவில்லை. பிறகு பாண்டிச்சேரியில் சிகிச்சை செய்தும் பயனில்லை.


நான் மேல்நிலை வகுப்பு படிக்கும் போது எங்கள் வீட்டிற்கு தாத்தா வரும் போது என் படிக்கும் அறையை பார்த்தார். இது என்ன கம்பியூட்டரா? என்று கேட்டார். இல்லை இது சைன்டிபிக் கால்குலேட்டர் என்றேன். நல்லா படி. படிச்சாதான் வாழ்க்கை என்று வாழ்த்தி சென்றார். அப்போது புதிதாக திருமணமாகி இருந்த மெல்கி அக்கா எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். என்னுடைய படிப்பை பற்றி பேசுவோம். எங்கள் வீட்டில் உள்ள தென்னை மரங்கள் கிணறு தென்றல் காற்று எல்லாவற்றையும் பார்த்து விட்டு பாரதியார் பாட்டு “காணி நிலம் வேண்டும்” என தொடங்கு பாடலை பாடுவார். அவரின் இரண்டாவது மகள் அனிட்டா பிறந்திருந்த போது வீட்டிலிருந்து சகாய மாதா கோவிலுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நானே கைகளில் தூக்கிச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. 


நான் முதுகலை படிப்பு படிக்கும் போது அம்மாச்சி புற்றுநோயினால் இறந்தார். அதன் பிறகு தாத்தாவிற்கு கண்பார்வை சிறிது குறைந்தது. 


நான் அமெரிக்கா செல்லும் போது தாத்தாவை பார்த்து விட்டு ஆசி வாங்கி சென்றேன். சென்னை அலுவலகத்தில் ஒரு பெண், அம்மா அப்பா பார்த்த படித்த ஒரு பெண், எங்கள் ஊர் பணக்கார வீட்டு ஒரு பெண், முதுகலை கல்லூரி நண்பனின் தங்கை, நீண்ட நாள் என்மீது ஆசை வைத்திருந்த மாமாவின் மகள், என் மீதுள்ள காதலை நோட்டு புத்தகமாக எழுதி என்னை படிக்க சொன்ன அத்தை மகள் என எல்லோரையும் என் மனதிற்கு பொருந்தாமல் தவிர்த்தேன். அமெரிக்காவிலிருந்து வந்து அம்மா அப்பா வைத்திருந்த ஆறு பெண்களின் விவரங்களை பார்த்தேன். ஒன்றை தேர்வு செய்து சென்று பார்த்தேன். அதுவும் அமையவில்லை. அம்மா அப்பாவிடம் என் பெரிய குடும்பத்தில்லுள்ள பிரச்சினைகளை பேசினேன். அதனை சரி செய்யவும் பெரிய மாமா சாமிநாதன் பெண்ணை நன்றாக அத்தை வளர்த்திருப்பார் என்றும் அம்மா அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கினேன். அப்பாவுக்குதான் ஏமாற்றம். உனக்கும் உன் படிப்புக்கும் ஏற்றவளா என்று யோசித்துக்கொள் என்றார். தாத்தாவை பார்க்க சென்றேன். மேலே கையை காண்பித்து அமெரிக்காவிலிருந்து எப்போது வந்த என்று கேட்டார். கல்யாணம் எப்ப. பெண் பார்த்து விட்டாயா? என்று ஆர்வமாக கேட்டார். இல்லை என்றேன். சாமிநாதன் பொண்ணை கட்டலாமே என்றார். சரி என்றேன். ஆசிர்வதித்தார். பரிசுத்தம் மாமா வீட்டுக்கு சென்று மதியம் சாப்பிட்டேன். அவர் புதிதாக வாங்கி இருந்த எதிர் வீட்டை அழைத்து சென்று காணப்பித்தார். மாலை பாஸ்கர் மாமா வீட்டுக்கு சென்று இரவு உணவு. சின்ன மாமாவும் அத்தையும் ஏன் பெரிய மாமா பொண்ணை கல்யாணம் பண்ணலாமே? என்று கேட்டார்கள். தாத்தாவும் கேட்டார் சரி என்றேன் என்று சொன்னேன். அடுத்த 25 நாளில் எனக்கும் பெரிய மாமா பெண் ஜெனிட்டாவுக்கும் திருமணம் முடிந்தது. அடுத்த நாள் ஆட்டோவில் பூண்டி மாதா ஆலயம் சென்று வணங்கி விட்டு கல்லணை சென்று வந்தோம் நானும், ஜெனிட்டாவும். 


மீண்டும் அமெரிக்காவிலிருந்து ஊருக்கு வந்தபோது தாத்தாவை சென்று பார்த்தேன். உடல் இளைத்து இருந்தது. பல நினைவு மூட்டைகளை சுமந்துகொண்டு என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேசுவதை கேட்க அங்கு யாருமில்லை. இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டே இருந்தார். எனக்கு நேரமாகியது. ஆனால் கேட்டுகொண்டே இருக்க தோன்றியது. அவரிடமிருந்து துயரத்தோடு பிரிந்து வந்தேன். நான் திரும்ப அமெரிக்கா வந்து மூன்று மாதங்களில் உயிர் விட்டார். 


2014ல் சென்றபோது சிவன் கோவில் சுத்தம் செய்யப்பட்டு சிலைகளிலும் சுவர்களிலும் கண்ணை பறிக்கும் வண்ணங்களை பூசியிருந்தார்கள். கோவிலின் நந்தவனம் அருகே இருந்த கடுவெளி சித்தரின் சிறிய கோவிலும் வண்ணம் பூசப்பட்டு அவரின் பாடல்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அவரின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி, மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” என்ற பாடலை பற்றி சார்லட் இலக்கிய வட்டத்தின் அரங்கில் 2021 ல் பேசியிருக்கிறேன். ஆலன் தான் அந்த பாட்டை பாடியிருந்தான்.


தாத்தா இறுதிவரை பெட்டிகடை வைத்திருந்தார். அதற்கு மளிகை பொருட்கள் வாங்க சைக்கிளில் சென்று வருவார். அவர் சைக்கிளில் செல்லும் போது சாலையில் போகும் எல்லா பேருந்து ஓட்டுநர்களுக்கும் தெரியும் அவருக்கு காது கேட்காது என்று.


தாத்தா எப்போதும் துருதுருவென ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பார். புத்தகத்திற்கு அட்டை போடும் பழுப்பு நிற தாளை மடித்து மடித்து பணப்பை செய்வார். காச்சல் என்றால் படுக்க கூடாது. போர்த்தி கொண்டு படுத்தால் நல்ல இடமாக இருக்கு என்று காய்சலுக்கு நம்மை பிடித்து விடுவதால் நம்மை விட்டு செல்லாது என்று சிரிப்பார்.


ஏக்கர் கணக்கில் அவரின் அப்பாவின் நிலங்களை விட்டு விட்டு வெறும் கையோடு தனியே வந்து எட்டு குழந்தைகளை வளர்த்து கரையேற்றினார். விட்டு கொடுப்பதால் கெட்டுவிடமாட்டோம் என்று எனக்கு உணர்த்தியவர். குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து முன்னேற கனவு கண்டார். அந்த கனவை எனக்கு புரியவைத்துவிட்டு சென்றார். நான் அதற்கு முயற்சி செய்தேன். என் திருமணத்தின் போது இளம் வயதில் பெருங்கனவோடு இருந்தேன். அதனால் பெரிய குடும்பத்தின் மூத்த பெண் பெரிய மாமாவின் பெண்ணை திருமணம் செய்தேன். ஆனால் இங்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு எதனையும் செய்ய முடியல்லை. மேலும் யாருக்கும் அதில் விருப்பமும் இல்லை. பிறரிடம் உள்ள குறைகளை சொல்லி பிரிவதை தவிர ஒற்றுமையால் கிடைக்கும் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிகளை யாரும் உணரவில்லை. இன்றைய தேவைகள் சமூகம் சூழ்நிலைகள் என பலருக்கும் தன்னுடைய குடும்பதை தவிர தமது பெரிய குடும்பதை பற்றிய கனவு யாரிடமும் இல்லை. ஆனால் எல்லோரும் வெவ்வேறு சூழலில் இருந்து படித்து வளர்ந்து எல்லோருக்கும் வெவ்வேறு அனுபவங்கள் இருப்பதால் எல்லோரையும் புரியவைக்க முடியாது. இதனை யாராவது ஒரு சிலர் எதிர் காலத்தில் உணர்வார்கள். அப்பொழுது தாத்தாவின் கனவு நிறைவேறலாம். நான் சொல்ல நினைப்பது எதனையும் பகடி செய்யும் இன்றைய தலைமுறைக்கு புரியாது. ஒருவேளை அவர்கள் கிணற்றுத்தவளையாகா இல்லாமல் வளர்ந்தால் வயதான பிறகு புரியும்.


நான் ஆறாவது படித்ததிலிருந்து கடுவெளிக்கு செல்வது குறைந்தது.  மாமாக்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. அவர்கள் வளர்ந்ததும் எல்லோரிடமும் பேசியிருக்கிறேன். தனிபட்ட முறையில் அவர்கள் நல்லவர்கள். குழுவாக இரண்டு மூன்றாக சேரும் போது அவர்களுக்குள் விட்டு கொடுத்து வாழ தெரியவில்லை. அதை தாத்தாவிடம் இருந்தும் கற்றுக் கொள்ள வில்லை.

தாத்தாவின் பேரப்பிள்ளைகள் நாங்களும் கொள்ளு பேரப்பிள்ளைகள் என் மகன்கள் இருவரும் அவரின் கனவு படி அமெரிக்காவில் பல இன்னல்களுக்கு பிறகு வேரூன்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அது ஆலமரமாக வளர்ந்து அதன் பழங்களும் நிழலும் நம் பெரிய குடும்பத்திற்கு உதவும் என்று நினைக்கிறேன்.


தாத்தாவிடமிருந்தும் கடுவெளியிலிருந்தும் நான் கற்றவற்றை சில புதுக்குறளாக எழுதி கீழே உள்ளவற்றை எனது புதுக்குறள் புத்தகத்தில் இணைத்துள்ளேன்.


1.சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தால்
நோய் வராமல் உடல்நலமாகும்

2.மெழுகுவர்த்தி எரிவதுபோல உழைத்துக்கொண்டே இருந்தால்
வாழும்வரை நோய் வராது 

3.நாற்பதில் நரைக்காமல் எண்பதில் எழுந்துநடக்க
இருபதிலிருந்தே முயற்சி செய்

4.பல்லாண்டுகளாக படிந்த வண்டலில் விளைந்த 
பாக்கு வெற்றிலை வாழை

5.ஊனமான பிள்ளைக்கு சொத்து சேர்த்துவை
சொத்து சேர்த்து ஊனமாக்காதே (-காமராஜர்)

6.மூளையை வளர்த்துக்கொள்ளவும் அனுபவத்தை மாற்றியமைக்கவும்
நாம் ஒருபோதும் வயதாகிவிடவில்லை

7.வாழ்வதற்கு பொருட்கள் இருந்தால் போதும் 
நாம் பொருட்களுக்காக வாழக்கூடாது

8.கொடுத்தால் அறம் கேட்டால் பிச்சை 
எடுத்தால் பிச்சையைவிட இழிவு  

இன்னும் நினைவுகள் வந்து கொண்டே இருக்கிறது. அனைத்தையும் இங்கே எழுத இடமிருக்காது. இதில் சொன்னவைகள் எல்லாம் என் ஆழ் மன நினைவுகளில் இருந்து முறத்தால் புடைத்து எடுத்த முத்துக்கள். சல்லடையை கொண்டு சலித்தால் பல நாறும் சாக்கடைகளாக கெட்ட நினைவுகள் வரலாம். அவைகள் நம்மீது வீச வேண்டாம் என்றுதான் இந்த முத்துக்களை எழுதியுள்ளேன். வயதானவர்களுக்கு தெரியும் நாம் செய்யும் தவறுகள். அவர்கள் நமக்கு சொல்லும் சில அறிவுரைகள் நமக்கு காலம் கடந்து வயதான பிறகு தான் புரியும். சொல்லும் போது புரிந்து கொள்ள நமக்கு அறிவு முதிர்ச்சி இல்லாததுதான் காரணம். அதனால் அவர்களின் பேச்சுக்களை கேட்காமல் இருப்பதும் அலட்சியம் செய்வதும் அவமதிப்பதும் எதிர் காற்றில் எச்சில் துப்புவது போலத்தான்.


எனக்கு பெயர் வைத்து என்னை படிப்பதற்கு பழக்கப்படுத்தி என்னுள்ளே அவரின் கனவை விதைத்து சென்ற தாத்தா இங்கு அமெரிக்கா வந்திருந்திருந்தால் எமர்சனையும் தோரோவையும் கார்வரையும்  படித்திருப்பார். நிச்சயமாக ஒரு குதிரையை இங்கு அமெரிக்காவில் வளர்த்திருப்பார். என்னைப்பொறுத்தவரை நிச்சயம் தாத்தா ஒரு செயல் வீரர் தான்.


தாத்தாவின் நினைவுகளோடு அமல்.

5-Oct-2025


-----

குறிப்பு;

புதுக்குறள் 2025: Puthukural 2025 (Tamil Edition) 

India

Sample

https://www.amazon.in/dp/B0FBH7XLVR?asin=B0FBH7XLVR&revisionId=91b0f5dc&format=3&depth=1

Book

amazon.in/dp/B0FBH7XLVR


USA

Sample

amazon.com/dp/B0FBH7XLVR

Book


https://www.amazon.com/dp/B0FBH7XLVR?asin=B0FBH7XLVR&revisionId=91b0f5dc&format=3&depth=1



No comments:

Post a Comment