https://www.amazon.in/dp/B0HLSTPY92
அன்புடன்
அமல் யாகுலசாமி
04 October 2026
https://www.amazon.in/dp/B0HLSTPY92
அன்புடன்
அமல் யாகுலசாமி
04 October 2026
என் மகன் ஆலன் ஆறு மாதத்திற்கு முன்பு புத்தக முன்பதிவு அறிவிப்பு வந்தவுடனேயே அவனுக்கு ஒரு நூலைப் பதிவு செய்யச் சொல்லிவிட்டான். இந்த வாரம் செப்டம்பர் 22ல் வெளியான இரண்டு நாளில் அது வீட்டிற்கு வந்துவிட்டது. அவனுக்கு இன்று அவன் படிக்க விரும்பும் கல்லூரியில் பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கம் இருந்ததால் காலையிலேயே அவன் அங்கு சென்றுவிட்டான். நான் மதியம் ஒரு மணிக்கு அவனை அழைத்துக் கொண்டு இருவரும் புத்தகத் திருவிழா நடந்த ஊருக்குச் சென்றோம். அவன் இப்பொழுது ஓட்டுநர் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதால் ஒரு மணி நேரம் ஓட்டினான். பிறகு ஒரு காபி வாங்கிக் கொண்டு நான் ஓட்ட ஆரம்பித்தேன். நிகழ்ச்சி நடக்கும் வட கரோலினாவின் வின்ஸ்டன்-சேலம் நகருக்கு இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். அதனால் நான் அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.
உனக்கு ஏன் இந்த எழுத்தாளரை பிடிக்கும் என்று கேட்டேன். அவன் சொன்னான் இவரைப் பற்றி நான் என்னுடைய தொடக்கப் பள்ளியில் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். என் வகுப்பு ஆசிரியர் எனக்கு இவரை அறிமுகப்படுத்தினார். யூடியூபில் கிராஷ் கோர்ஸ் என்ற சேனலில் அவர் பாடங்களை எளிதாக சொல்லிக் கொடுப்பார். அவர் எழுதிய எல்லா புத்தகங்களையும் நாவல்களையும் நான் படித்து விட்டேன். அவருடைய நோக்கம் உண்மையானது. எல்லோருக்கும் உதவி செய்வது. அவர் இப்படி சம்பாதிக்கும் பெரும்பாலான செல்வத்தை ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு செலவிடுகிறார். மேலும் பல நல்ல காரியங்களுக்காக இங்கே மருத்துவமனைகளுக்கு செலவிடுகிறார். மற்ற யூடியூபர்களைப் போல இல்லாமல் இவர் தொடர்ந்து பல நல்ல காரியங்களுக்காக முயற்சி செய்வதால் இவரை எனக்கு பிடிக்கும். இவருடைய எழுத்துக்களும் எனக்கு பிடித்தவை. இவர் மூலம் நான் அதிகமான விஷயங்களை தெரிந்து கொண்டேன் என்று அவன் சொன்னான்.
இவன் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பையன். அதிகமாகப் புத்தகங்களைப் படிப்பவன். எதைப் பற்றிப் பேசினாலும் அவனுக்குச் சொல்ல ஏதாவது இருக்கும். உனக்கு மற்ற எழுத்தாளர்களைப் பிடிக்குமா, எந்தெந்த எழுத்தாளர்களைப் பிடிக்கும், அவர்கள் எழுதிய ஏதாவது முக்கியமான நாவல்களைப் பற்றிச் சொல்ல முடியுமா என்று கேட்டேன்.
"மார்க் ட்வைன் ரொம்ப பழைய எழுத்தாளர்," என்று ஆலன் தொடங்கினான். "தொழிற்புரட்சி, 'கில்டட் ஏஜ்' காலத்தில் அந்தச் சமூகத்தையே கேலி செய்து எழுதினார்." பிறகு ஆல்பர்ட் காம்யூ. அந்தப் பெயரை உச்சரிக்க நான் சில முறை முயன்றேன். "காம்யூ... காம்யூ." ஆலன் சிரித்துக்கொண்டே விளக்கினான்: "அவர் ஒரு பிரெஞ்சு இருத்தலியல் தத்துவவாதி. 1940, 50-களில் எழுதியவர். அவருடைய The Stranger நாவலில் கதாநாயகன் அல்ஜீரியாவில் ஒருவனைக் கொன்றுவிடுவான்."
டாக்டர் சூஸ் பற்றியும் பேசினான். "அவை குழந்தைகளுக்கான கதைகள்தான். ஆனால் உள்ளே அரசியல் இருக்கிறது. Yertle the Turtle ஹிட்லரைப் பற்றியது. இரண்டாம் உலகப் போரின்போது அவர் ராணுவத்துக்குக் கார்ட்டூன் வரைந்தவர்."
தன் வாசிப்பு ரசனையையும் பகிர்ந்தான். ஹாரி பாட்டர் பிடித்தது. Lord of the Rings மிக நீளமாக இருந்ததால் பாதியிலேயே கவனம் சிதறிவிட்டது. Hunger Games, Divergent போன்ற டிஸ்டோபியன் நாவல்கள் பிடிக்கும். ஜார்ஜ் ஆர்வெல் அவனுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். ஒருநாள் தஸ்தயேவ்ஸ்கியைப் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
ஆனால் அயன் ராண்ட் பெயர் வந்ததும் அவன் குரல் மாறியது.
"அவர் கம்யூனிச ரஷ்யாவிலிருந்து தப்பி வந்தவர். அதனால் பல அமெரிக்கர்களுக்கு அவரைப் பிடிக்கும். ஆனால் Atlas Shrugged, The Fountainhead இரண்டும் சுயநலத்தை நியாயப்படுத்தும் நூல்கள். அவர் தன் அரசியல் கருத்துகள் வேலை செய்வதற்காகவே கற்பனை உலகங்களைப் படைத்தார். ஒரு கதையில் ஒரு ரயில்வே நிறுவனம் மெக்சிகோவை விட்டு வெளியேறுகிறது. உடனே அங்குள்ள ரயில்வே சரிந்துவிடுகிறது. அதற்கு மெக்சிகோதான் காரணம் என்று சொல்கிறார்! பல ஆண்டுகளாகப் பராமரித்தவர்களே வெளியேறினால் சரியத்தானே செய்யும்? பிரச்சினையை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்!"
பேச்சு மொழிகளுக்குத் திரும்பியது. உனக்கு என்னென்ன மொழி எவ்வளவு தெரியும்?
"எனக்கு அராபிக் மொழித் தேர்வில் 'இன்டர்மீடியட் ஹை' கிடைத்தது," என்றான் ஆலன் பெருமையுடன். "அடுத்த வசந்த காலத்தில் 'Seal of Biliteracy' தேர்வு எழுதப் போகிறேன்." அவன் நான்கு மாதங்களுக்கு முன்புதான் அந்த மொழியை படிக்க ஆரம்பித்து இருந்தான். அதைப் படிப்பதற்காக கடந்த ஜூன் மாதத்தில் ஆறு வாரங்கள் அரசின் முழு உதவித் தொகையுடன் மொரோக்கோ சென்று வந்தான்.
அவன் தன் மொழிகளை ஒவ்வொன்றாக எண்ணினான். ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு மூன்றும் சரளமாக வரும். அரபு பேசத் தெரியும், ஆனால் அன்றாட விஷயங்கள் மட்டுமே. "பிரெஞ்சில் நான் அல்ஜீரியா பற்றி, கனடா அரசியல் பற்றி, ஆப்பிரிக்கா பற்றி, ஏன், பழைய பிரெஞ்சு மருத்துவ வரலாறு பற்றிக்கூடத் தெரிந்துகொண்டேன். அரபில் அவ்வளவு ஆழம் எனக்கு இல்லை."
லத்தீன் கொஞ்சம் படிக்கத் தெரியும். தேவாலயத்தில் நடப்பதைப் புரிந்துகொள்ள அது போதும். "தெரியுமா? Diary of a Wimpy Kid லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டு போப் பிரான்சிஸுக்குப் பரிசாக வழங்கப்பட்டது!" என்றான்.
ஸ்பானிஷ் பற்றிச் சொல்லும்போது ஒரு அழகான ஒப்பீடு செய்தான். "ஸ்பானிஷ் எனக்குப் புரியும், ஆனால் பேச வராது. தமிழ் தெரிந்தவருக்குத் தெலுங்கு எப்படியோ, அப்படி. கேட்டால் புரியும், ஆனால் சொந்தமாகப் பேச முடியாது."
அடுத்த கனவு பாரசீக மொழி. "அரபும் ஹீப்ருவும் செமிட்டிக் மொழிக் குடும்பம். ஆனால் பாரசீகம் இந்தோ-ஐரோப்பிய மொழி. ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சுக்கு நெருக்கமானது. அதைக் கற்றால் ரூமியைப் படிக்கலாம், ஷாநாமாவைப் படிக்கலாம், ஈரானியப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளலாம்."
"பாரசீகம் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் நடுவே இருக்கும் ஒரு தனித்துவமான பண்பாடு," என்று ஆலன் தொடர்ந்தான்.
கரீபியன் தீவுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரைப் பற்றி அவன் மரியாதையுடன் பேசினான். "நீங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர், அதனால் இது உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் இங்கே வளர்ந்த எனக்கு அவர்கள் அண்ணன்களைப் போல. முதலில் வந்தவர்கள் அவர்கள்தான். தமிழ் பேசாவிட்டாலும் இன்றும் முருகனை வழிபடுகிறார்கள். தங்கள் வேர்களை மறக்கவில்லை."
நான் சொன்னேன், எழுத்தாளர் ஜெயமோகன், வெண்முரசை விடப் பெரிய, 26,000 பக்கங்களுக்கும் அதிகமான ஒரு நாவலை, உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்தியர்களைப் பற்றி எழுதும் திட்டத்தில் இருக்கிறார். அவருக்கு நீயும் உதவலாம் என்று நினைக்கிறேன். நிச்சயமாக உதவுவேன் என்றான்.
பிறகு சொராஸ்டிரிய மதம் பற்றிப் பேசினான். அது உலகின் முதல் ஒரே கடவுள் மதங்களில் ஒன்று என்றும், நன்மை-தீமை என்ற இருமைக் கருத்து அங்கிருந்தே பிறந்தது என்றும் விளக்கினான்.
அதிலிருந்து பிறந்த மணிக்கேயிசம் பற்றி சொன்ன அவன் கண்கள் மின்னின. "ஒரு காலத்தில் அதுதான் உலக மதமாகும் என்று எல்லோரும் நினைத்தார்கள்! புனித அகஸ்டின்கூட ஒருகாலத்தில் மணிக்கேயர்தான். அது இயேசு, சொராஸ்டர், புத்தர், கிருஷ்ணர் எல்லோரையும் ஒன்றிணைத்தது. பிரிட்டனிலிருந்து சீனா வரை பரவியது."
நான் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றிச் சொன்னேன். "இந்தியாவில் ஒவ்வொரு ஐம்பது நூறு கிலோமீட்டருக்கும் பண்பாடு மாறும்" என்றேன்.
ஆலன் ஒரு கனவையும் பகிர்ந்தான்: "இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் போல இருந்திருக்கலாம். தமிழ்நாடு தனித்துவத்துடன் இருக்கும், ஆனால் எல்லைகள் திறந்திருக்கும், வணிகம் சுதந்திரமாக நடக்கும்." இப்பொழுதும் சிறிய மாற்றத்துடன் அப்படித்தான் இருக்கிறது என்றேன்.
பேச்சு அரசியலுக்கு வந்தது. இவை ஆலனின் சொந்தக் கருத்துகள்.
"இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவை உடைத்தது. ஆனால் அந்த வலியிலிருந்து அவர்கள் பாடம் கற்றார்கள். போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் சில சமயம் ஞானிகளாவது போல. அமெரிக்கா போரிலிருந்து பெரிய காயமின்றி வெளிவந்தது."
ஆர்வெலின் 1984 நாவலை நினைவுகூர்ந்தான்: "முடிவில்லாத போர் என்ற கருத்து அதில் வருகிறது. நாமும் அந்தத் திசையில் போகிறோமோ என்று தோன்றுகிறது." நாம் கூட்டாளி நாடுகளை மதிக்காதது பெரிய தவறு என்றும் வருந்தினான்.
அமெரிக்கத் தேர்தல் முறையைப் பற்றியும் விமர்சித்தான். "வெற்றி பெற்றவருக்கே எல்லாம் என்ற முறையில் பெரிய சிறுபான்மையினருக்குக் குரல் இல்லாமல் போகிறது. ஜெர்மனியில் விகிதாச்சார முறை இருக்கிறது. இந்தியாவில் டெல்லியில் ஒரு கட்சி ஆண்டாலும் தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள் என்று மற்றவர்களுக்கும் இடம் இருக்கிறது." என்றான்.
சீனாவைப் பற்றிப் பேசும்போது வரலாற்றின் ஆழத்துக்குச் சென்றான். "பிரிட்டன் இந்தியா சீனா ஹாங்காங் மக்காவ் போர்ச்சுகல் இலங்கை என்று பேச்சு நீண்டது.
ஜான் கிரீன், மார்க் ட்வைனில் தொடங்கி, காம்யூ, ரூமி, முருகன், மணிக்கேயிசம் வழியாக சீனாவின் துறைமுகங்கள் வரை பயணித்தது பேச்சு. ஒரு இளைஞனின் ஆர்வமும், கேள்விகளும், உலகைப் புரிந்துகொள்ளத் துடிக்கும் மனமும் அதில் நிறைந்திருந்தன. நான் என் பதின்ம வயதில் நிறைய புத்தகங்கள் என் அண்ணன் உதவியோடு படித்தேன். ஆனால் இந்த அளவுக்கு தெளிவாக பேச தெரியாது. உலகை பற்றிய அவனது பார்வை எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்று காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். அங்கே ஏற்கனவே 100 பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது மணி மாலை 5:30. இன்னும் நிகழ்ச்சி ஆரம்பிக்க ஒன்றரை மணி நேரம் இருந்தது. அதற்குள் இவ்வளவு கூட்டம்.
எங்களுக்கு முன்பாக ஒரு வயதான பாட்டி நின்று கொண்டிருந்தார். புதிய புத்தகத்தைப் பாதி படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் புத்தகம் எப்படி இருக்கிறது என்று விசாரித்தான். நேற்றே எனக்கு புத்தகம் கிடைத்துவிட்டது. இதுவரை மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் இதற்கு மேல் கதையைச் சொல்லி உன் சுவாரசியத்தைக் கெடுக்கப் போவதில்லை என்றார். அவனும் ஆமாம் எனக்கும் புத்தகம் வந்துவிட்டது. நாளைக்குத்தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும். எனக்கு பள்ளியில் வேலை இருந்ததால் என்னால் முடியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது எனக்கு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்தது. எங்கள் ஊர் தமிழ் சங்கத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பே அடுத்து வரும் பொங்கல் விழாவில் நடனம் ஆடுவதற்கான முன்பதிவு குறித்த அறிவிப்பு. அதற்கான விதிமுறைகளும் அதில் இருந்தன. நேற்றுதான் “நம் அடுத்த தலைமுறைக்கு நாம் எதைக் கொடுக்க வேண்டும்” என்ற ஜெ யின் காணொளியை நடைபயிற்சியின் போது இரண்டாவது முறையாகக் கேட்டேன். அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் தமிழ் சங்கங்கள் நடக்கும் முறைகளைப் பற்றிய மெல்லிய நகைச்சுவையான காணொளி. அந்த நகைச்சுவைக்கு பின்னாலிருந்த ஜெ யின் வருத்தங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நானும் நேரடியாக அனுபவித்திருக்கிறேன். ஜெ யின் பனிமனிதன் நாவலை இங்குள்ள தமிழ் பள்ளியின் மாணவர்களிடம் கொண்டு செல்ல முயன்று பலரின் எதிர்ப்பால் 2018ல் கைவிட்டேன். எங்கள் ஊரில் என் மனைவி தன் நண்பருடன் சேர்ந்து தமிழ் பள்ளி ஆரம்பிக்க உதவியாக இருந்தாள். நானும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் அதில் இருந்தோம். பிறகு சில பிரச்சினைகளால், தேவையில்லா பிரச்சினைகள் வேண்டாம் என்று சங்க நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி கொண்டோம். குழந்தைகளும் நடுத்தர ஆண்களும் பெண்களும் இப்போது ஆறு மாதங்களுக்கு வார இறுதியில் குத்தாட்ட நடனப் பயிற்சி செய்வார்கள். ஐந்து நிமிடத்தில் ஐந்து விதமான பாடல்களுக்கு நடனம். பத்து பேர்களுக்கு இருபது விதமான உட்குழுக்கள் இருக்கும். குத்தாட்ட நடனப் பயிற்சி மற்றும் அரங்கேற்றங்களை யூடியூபில் ஏற்றுவார்கள். அதன் பிறகு அடுத்த மூன்று மாதங்களுக்கு நிகழ்ச்சியின் வெற்றியை கொண்டாட வார இறுதியில் உணவு வகைகளோடு கூடி யூடியூபில் யாருடைய நடன காணொளி அதிக பார்வையாளர்களை பெற்றது என்று விவாதிப்பார்கள். இது இங்குள்ள தமிழ் சங்கத்தின் மிகப்பெரிய முக்கியமான பணி. இதில் மாட்டிக்கொண்டு முழிப்பது உலக இலக்கியங்களை கரைத்து குடித்துக்கொண்டிருக்கும் எட்டாவது வரை படித்துக்கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள்தான். ஒன்பதாவது வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடமிருந்து பிரிந்து அவர்கள் வேலையை பார்க்க சென்று விடுவார்கள்.
நாங்கள் சென்ற அரை மணி நேரத்துக்குள் 1000 பேருக்கு மேல் வரிசையில் சேர்ந்து விட்டார்கள். 6:15 க்கு அவர்கள் எல்லோரையும் பாதுகாப்பு சோதனை செய்ய ஆரம்பித்து அடுத்த இருபது நிமிடத்தில் 2300 பேரும் அமர்ந்தோம். இவ்வளவு பெரிய கூட்டத்தை புத்தக வெளியீட்டு விழாவிற்கு நான் எதிர்பார்க்கவில்லை. நுழைவு சீட்டுடன் வெளியான புத்தகம் ஒன்றும் கொடுத்தார்கள். அந்த விழாவின் தொகுப்பாளர் புத்தகத் திருவிழாவின் தலைவர் வந்து அறிமுக உரையை முடித்தார். அப்பொழுது எழுத்தாளர் மேடைக்கு வந்ததும் மிகப்பெரிய கைத்தட்டல்களுடன் வரவேற்பு இருந்தது.
கிரீனின் புதிய நாவலான Hollywood, Ending-இன் வெளியீட்டு நிகழ்வு வட கரோலினாவின் வின்ஸ்டன்-சேலம் நகரில் உள்ள ஒரு தேவாலய அரங்கில், வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இலக்கிய இலாப நோக்கற்ற அமைப்பான Bookmarks தனது புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக இதை நடத்தியது. எழுத்தாளர் ஆஞ்சி தாமஸ் ஜான் கிரீனுடன் உரையாடினார். தனது புத்தகச் சுற்றுப்பயணத்திலேயே இதுதான் மிகப்பெரிய நிகழ்வு என்று கிரீன் குறிப்பிட்டார். அவரது புத்தகச் சுற்றுப்பயணம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்துகொண்டிருக்கிறது.
Bookmarks அமைப்பின் பிரதிநிதி ஒருவர் அந்த அமைப்பின் பணிகளை விவரித்துத் தொடங்கினார். வட கரோலினாவின் ஒரே இலாப நோக்கற்ற புத்தகக் கடையை இந்த அமைப்பு நடத்துகிறது. கரோலினா மாநிலங்களின் மிகப்பெரிய இலவசப் புத்தகத் திருவிழாவையும் நடத்துகிறது. பள்ளிகளுக்கு எழுத்தாளர் வருகைகளை ஏற்பாடு செய்கிறது (அன்று மட்டும் 17 வருகைகள்). குழந்தைகளுக்கு இலவசப் புத்தகக் கண்காட்சிகள் நடத்துகிறது. "Books with Purpose" என்ற சமூக வாசிப்புத் திட்டத்தையும் நடத்துகிறது; இவ்வாண்டு அதன் தேர்வு பெட்டினா லவ் எழுதிய Punished for Dreaming. திருவிழா தொடர்ந்து இலவசமாக இருக்க நன்கொடை அளிக்குமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்டு, நிகழ்வின் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நாவல் திரைப்படங்களுக்கு எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம் என்று கிரீன் கூறினார். அதே நேரம், அதிர்ச்சியும் வலியும் உட்படத் தனிப்பட்ட அனுபவங்கள் "கவனப் பொருளாதாரத்திற்கு" (attention economy) தீனியாகப் பொது உள்ளடக்கமாக மாற்றப்படுவது குறித்த அவரது வேதனையையும் இது வெளிப்படுத்துகிறது.
புகழைப் பற்றிய கதையாகத் தொடங்கிய இந்நூல், மனிதர்கள் கடினமான காலங்களை எப்படிக் கடக்கிறார்கள், தாங்கிப் பிடிக்கும் அன்பை எப்படிக் கண்டடைகிறார்கள் என்பது பற்றிய கதையாக வளர்ந்தது என்றார். அந்த அன்பு பெரும்பாலும் கலையைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் கிடைக்கிறது. "நாம் கடந்து வந்தவை உயிர்வாழும் இடமே கலை" என்ற கவிஞர் காவே அக்பரின் வரியை மேற்கோள் காட்டி, அதுவே தனது "துருவ நட்சத்திரம்" என்றார். பின்னர் நாவலின் தொடக்கப் பக்கங்களை வாசித்தார்.
பின்னர் ஆஞ்சி தாமஸுடனான உரையாடல் இருந்தது. Everything Is Tuberculosis போன்ற அபுனைவு நூல்களுக்குத் தெளிவான நோக்கம் இருந்தது. புனைவை "ஒருகாலத்தில் நேசித்த ஒருவரை இழப்பது போல" இழந்து தவித்ததாகவும், இந்தக் கதையின் மூலம் மீண்டும் அதன் மீது காதல் கொண்டதாகவும் கூறினார். நிகழ்வில் இருந்த TB Fighters அமைப்பின் மேசையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
கதைக்கான உந்துதல் பற்றிச் சொல்லும் போது, கதாபாத்திரங்கள்தான் முதலில் உருவானார்கள் என்றார். முதல் வரைவு ஒரு போர்த் திரைப்படத்தை மையமாகக் கொண்டிருந்தது. வார்ஹோல் அறிஞரும் Andy Warhol Enterprises நூலின் இணை ஆசிரியருமான அவரது மனைவி சாரா, முன்பு கைவிடப்பட்ட ஒரு நாவலில் இருந்த வார்ஹோல் திரைப்படக் கருவைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார். திரைகள் மனித வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்தும் என்பதை வார்ஹோல் முன்கூட்டியே கண்டவர். அது நூலின் கருப்பொருள்களுக்குப் பொருந்தியது.
தலைப்பும் வரைவுகளும் பற்றிப் பேசும் போது, தலைப்பில் உள்ள காற்புள்ளி பல வேலைகளைச் செய்கிறது என்றார. முடிவுக்கு வர வேண்டிய ஒரு பழைய ஹாலிவுட்டைக் குறிக்கிறது; நேர்த்தியான "மகிழ்ச்சியான முடிவு" என்ற கருத்தைச் சிக்கலாக்குகிறது. கதையைத் தான் முன்கூட்டியே திட்டமிடுவதில்லை (outline செய்வதில்லை) என்பதால், முதல் வரைவுகளின் பெரும்பகுதியை நீக்கிவிடுவதாகக் கிரீன் கூறினார். நூல் முதலில் காயின் பார்வையில் மட்டுமே சொல்லப்பட்டது. ஜூனிபரின் லட்சியமும் கலை மீதான அர்ப்பணிப்பும், இளம் பெண்களிடம் ஹாலிவுட் பெரும்பாலும் குறைகளாகப் பார்க்கும் பண்புகள் அல்ல, பலங்கள் என்பதை வாசகர்கள் காண, அவளுடைய குரலையும் சேர்த்தார்.
புத்தகத் தடைகள் பற்றிப் பேசும் போது, அமெரிக்காவில் அதிகம் தடை செய்யப்படும் எழுத்தாளர்களில் இருவரும் அடங்குவர். தான் சுயதணிக்கை செய்யாமல் இருக்க முயல்வதாகக் கிரீன் கூறினார். தடைப் பட்டியல்கள் பெரும்பாலும் கறுப்பின மற்றும் பிற நிற எழுத்தாளர்களையே குறிவைக்கின்றன என்றும், Looking for Alaska வேண்டுமென்றே கவர்ச்சியற்றதாக எழுதப்பட்ட ஒரு காட்சிக்காக எதிர்ப்புக்குள்ளாகிறது என்றும் குறிப்பிட்டார். அறிவுச் சுதந்திரத்தின் உண்மையான காவலர்கள் ஆசிரியர்களும் நூலகர்களும்தான் என்று பாராட்டினார். அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று ஆஞ்சி தாமஸ் சேர்த்தார்.
புகழைப் பற்றிய சிக்கலான பார்வையையும், கலையும் நம் வாழ்க்கையை மாற்றக்கூடியது, நம்மைக் காப்பாற்றக்கூடியதும் கூட என்ற உணர்வையும் வாசகர்கள் பெற வேண்டும் என்று கிரீன் விரும்புகிறார். தனது முதல் நூலான The Hate U Give-க்குப் பரிந்துரை வாசகம் எழுதியதற்காக ஆஞ்சி தாமஸ் கிரீனுக்கு நன்றி தெரிவித்தார். அதற்காகத் தானே அவரது பதிப்பாசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டதாகவும், அப்படி அதற்கு முன் ஒருபோதும் செய்ததில்லை என்றும் கிரீன் விளக்கினார்.
நாவலில் வரும் Gods of Andromeda என்ற கற்பனைத் திரைப்படத்தின் ஒரு காட்சியை, பெண்கள் ஆட்சி செய்யும் ஒரு சமூகத்தில் நடக்கும் காட்சியை, இரண்டு பார்வையாளர் தன்னார்வலர்கள் "கெமிஸ்ட்ரி ரீட்" ஆக நடித்துக் காட்டினர்.
பின்னர், பார்வையாளர்கள் கேள்விகளைக் கேட்டனர்.
• இசை: எழுதத் தொடங்கும்போது இசை கேட்பதாகவும், "வார்த்தைகள் காதில் ஒலிக்கத் தொடங்கியதும்" நிறுத்திவிடுவதாகவும் கிரீன் கூறினார். அவருக்கு அஃபன்டேசியா (aphantasia) உள்ளது; அதாவது மனதில் காட்சிகளை உருவாக்க முடியாது.
• திரைப்படங்கள்: Harvey (1950), Rushmore, Moonlight ஆகியவற்றைப் பரிந்துரைத்தார். Moonlight அவருக்கு எல்லாக் காலத்திலும் மிகப் பிடித்த திரைப்படம்; நாவலிலும் அது குறிப்பிடப்படுகிறது.
• லிவர்பூல்: கால்பந்து அணியின் நடப்புப் பருவம் மற்றும் புதிய அணி குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார்.
• ஏற்றுக்கொண்ட முரண்பாடு: தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையையும், வாராந்திர யூடியூப் காணொளிகள் உட்பட ஒரு பொது வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் விரும்புகிறார்.
• நம்பிக்கை: உண்மையான அநீதிகளை ஒப்புக்கொண்டே, விரக்தி சொல்லும் மிக எளிமையான கதையை எதிர்க்கிறார். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்கள் ஆண்டுக்குச் சுமார் 1.2 கோடியிலிருந்து 50 லட்சத்துக்கும் குறைவாகக் குறைந்ததைக் காட்டும் ஒரு குறிப்பைத் தன் பணப்பையில் வைத்திருக்கிறார். அந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதும், அதே நேரம் போதாததும் என்றார்.
• காசநோய்: நாவலில் காசநோய் பற்றிய ஒரு மறைகுறிப்பு (Easter egg) உள்ளது. வார்ஹோலின் தந்தைக்கு நுரையீரலுக்கு வெளியே பரவும் காசநோய் இருந்தது.
நூலின் விளம்பர மேலாளர் எலிஸ் மார்ஷல் ஃபைஃபர் கிரீனைப் பற்றிப் பேசும் போது, அலாஸ்காவுக்குச் சென்ற ஒரு சாலைப் பயணக் கதையைச் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் திசை மாறிவிடுவதாகக் கிண்டல் செய்தார்.
இறுதி வரை நகைச்சுவையாகவும் புத்தகத்தைப் பற்றியும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அரங்கிலிருந்த 2300 பேர்களும் கையில் அவரது புத்தகத்தோடும் அவரோடும் மொத்தமாக பெரிய புகைப்படம் மேடையிலிருந்து எடுத்தார்கள்.
கலையை உருவாக்குவதற்கு விலை இருந்தாலும், ஒவ்வொரு மனிதக் குரலும் அரிதானது, முக்கியமானது என்பதால், எல்லோரும் கலையை உருவாக்கிப் பகிர வேண்டும் என்று ஊக்குவித்து கிரீன் நிறைவு செய்தார். மறைந்த தனது நண்பர் எமி க்ரௌஸ் ரோசென்டாலின் நினைவைப் பகிர்ந்தார். முதல் உலகப் போர் வீரர்களின் "We're here because we're here" என்ற பாடலை அவர் நம்பிக்கையின் பாடலாக மீட்டெடுத்தவர். பின்னர் கிரீனும் ஆஞ்சி தாமஸும் பார்வையாளர்களுடன் இணைந்து அந்தப் பாடலைப் பாடினர். மிகவும் உணர்ச்சிகரமான ஒரு சூழலில் அவர்கள் மேடையிலிருந்து விடைபெற்றார்கள். பிறகு அவரின் பிற இரண்டு புத்தகங்களை வாங்க வேண்டும் என்றான் ஆலன். அதனை வாங்க வரிசையில் நின்றோம். நான்கு இடத்தில் மேசையில் வைத்து விற்பனை செய்தார்கள்.
இரவு 8:30, பசித்தது. ஒரு உணவுக்கடை கூட இல்லை. நம்ம ஊர் புத்தகத் திருவிழா இது மாதிரியாகவா இருக்கும்? ஒரு பெரிய அப்பளமோ வறுத்த மீனோ சோளா பூரியோ விற்காத விழா இருக்குமா? ஒரு அரசியல் தலைவரோ திரைப்பட ஹீரோவோ இல்லாமல் எப்படி இவர்கள் விழா கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் நம் தமிழ் நாட்டைப்போல் விழா கொண்டாட இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். இறுதியாகக் கழிவறைக்குச் சென்றால், இல்லாத அழுக்கை ஒரு ஆள் துடைத்துக் கொண்டிருக்கிறான். வேலையற்றவன். இந்த கழிவறை இவ்வளவு பேர் பயன்படுத்தியது போலவா இருக்கிறது. இந்தியாவிலுள்ள பொதுக்கழிப்பறையின் மணம் அறியா மூடன் என்று நினைத்துக்கொண்டேன்.
உணவகத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்குக் கிளம்பும் போது 9 மணி. இரவு 12:30 க்கு வீடு வந்து சேர்ந்தோம். என் மகனோடு செலவு செய்த இந்த 12 மணி நேரத்தில் ஒவ்வொரு மணித்துளியும் பயனுள்ளதாக இருந்தது. அதை அப்படியே பதிவு செய்ய நினைத்தேன். எனக்கே இது பின்னாளில் உதவும் என்ற நம்பிக்கையில்.
நம் பிள்ளைகளுக்கு நம்மை விட அதிகமாக தகவல்கள் கிடைக்கிறது. ஆலனுக்கு பனிமனிதன் நாவலில் உள்ள திருஷ்ணை என்ற சொல்லின் பொருள் புரியும். யானை டாக்டர், அறம் சிறுகதைகளின் அடிப்படை கருத்து புரியும். நம்மை விட நம் பிள்ளைகள் அறிவாளிகளாக வளர்வார்கள். அதனை நாம் வேடிக்கை பார்த்தாலே போதும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி. அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என்று முயற்சி செய்து நம் பெயரை கெடுத்து கொள்ளாமல் இருப்பதே மேல். நம் பிள்ளைகள் நம்மை விட பல மடங்கு பாய்வார்கள். இந்த தெளிவினை எனக்கு ஏற்படுத்திய உங்களின் எழுத்து பணிக்கு நன்றி ஜெ.
அன்புடன்
அமல் யாகுலசாமி
26 September 2026